ஹாமில்டன்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் இலங்கை அணி, ஐ.சி.சி., உலக கோப்பை (2023) தொடருக்கு நேரடியாக தகுதி பெறத் தவறியது.
நியூசிலாந்து சென்றுள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. நேற்று, ஹாமில்டனில் 3வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு நுவனிது பெர்னாண்டோ (2), குசல் மெண்டிஸ் (0), மாத்யூஸ் (0), சரித் அசலங்கா (9), தனஞ்செயா டி சில்வா (13) ஏமாற்றினர். பதும் நிசங்கா (51), கேப்டன் தசுன் ஷனகா (31), சமிகா கருணாரத்னே (24) கைகொடுத்தனர். இலங்கை அணி 41.3 ஓவரில் 157 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நியூசிலாந்து சார்பில் மாட் ஹென்ரி, ஹென்ரி ஷிப்லி, டேரில் மிட்சல் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
சுலப இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு சாத் போவ்ஸ் (1), டாம் பிளன்டெல் (4), டேரில் மிட்சல் (6), கேப்டன் டிம் சவுத்தீ (8) ஏமாற்றினர். பின் இணைந்த வில் யங் (86*), ஹென்ரி நிக்கோல்ஸ் (44*) ஜோடி வெற்றியை உறுதி செய்தது. நியூசிலாந்து அணி 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, ஐ.சி.சி., உலக கோப்பை சூப்பர் லீக் (2020-2023) புள்ளிப்பட்டியலில் 81 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தது. இதன்மூலம், வரும் அக். 5 - நவ. 19ல் இந்தியாவில் நடக்கவுள்ள ஐ.சி.சி., உலக கோப்பையில் விளையாட நேரடியாக தகுதி பெறத் தவறியது. இனி, ஜிம்பாப்வேயில் நடக்கவுள்ள தகுதிச் சுற்றில் (ஜூன் 18 - ஜூலை 9) பங்கேற்க உள்ளது. இதில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் விளையாட உள்ளது.