சென்னை: அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், தேர்தல் கமிஷனில், முறைப்படி சமர்பிக்கப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க., பொதுச் செயலர் தேர்தல், கடந்த மாதம் நடத்தப்பட்டது. தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் விஸ்வநாதன் ஜெயராமன் ஆகியோர், தேர்தல் அறிவிப்பை வெளியிட்டனர். மார்ச், 18, 19ல் மனு தாக்கல் நடந்தது.
தேர்தலுக்கு தடை கோரி பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் நீதிமன்றம் சென்றனர். தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது. வேட்பு மனு தாக்கலின்போது, பழனிசாமி தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை, கடந்த, 28ம் தேதி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அன்றைய தினம், அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி, ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார் என, முறைப்படி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே, அவர் பொதுச் செயலராக பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்கள் முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஏற்றால் அ.தி.மு.க., பிரச்னைகள் முடிவுக்கு வரும்.