வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஐகோர்ட் உத்தரவு காரணமாக, பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து சந்தேகம் அதிகரித்துள்ளது என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை தரும்படி குஜராத் பல்கலைக்கு, மத்திய தகவல் ஆணையம் பிறப்பத்த உத்தரவை , குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இது குறித்த தகவல்களை கேட்ட புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கெஜ்ரிவால் கூறியதாவது: ஒரே நாளில் பல முக்கிய முடிவு எடுத்துள்ளதால், பிரதமர் பட்டம் பெற்றிருப்பது மிகவும் முக்கியம். ஐகோர்ட் உத்தரவு காரணமாக பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அவர் பட்டம் பெற்றிருந்தால், அது உண்மையாக இருந்தால், அதனை காண்பிக்க மறுப்பது ஏன்?.
ஐகோர்ட் உத்தரவால், நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவதற்கும், தகவல்களை கேட்பதற்கும் சுதந்திரம் வேண்டும். டில்லி மற்றும் குஜராத் பல்கலைகழகங்களில் பிரதமர் படித்து இருந்தால், அதனை கொண்டாட வேண்டும். மாறாக அதனை மறைக்கிறார்கள். மோடியின் சர்வாதிகாரம் அல்லது போலி பட்டம் காரணமாக தான், குஜராத் பல்கலை பிரதமர் பட்டம் குறித்து வெளியிட மறுக்கிறது.

நாட்டில் வறுமை நிலவியதால், படிக்காமல் இருப்பது பாவம் இல்லை. நம்மில் பலரின் குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இல்லாத காரணத்தினால், பலர் முறையான கல்வி கற்கவில்லை. ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் நாட்டிற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. பிரதமர் படித்து இருந்தால், இந்த திட்டத்தை அமல்படுத்தி இருக்க மாட்டார்.இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.