ஐஸ்வால்: மிசோரமில் வன்முறை குறைந்து அமைதி நிலவுகிறது. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் வெற்றிக்கு கிடைத்த உதாரணம் என மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மிசோரம் மாநிலம் ஐஸ்வாலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமித்ஷா பேசியதாவது: ஒரு காலத்தில் மிசோரமில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நடந்தன. ஆனால் இன்று முதல்வர் சோரம்தங்கா ஆட்சி சிறப்பாக செயல்படுவதால், அமைதி நிலவுகிறது. இது இந்தியாவின் ஜனநாயகத்தின் வெற்றிக்கு கிடைத்த உதாரணம் ஆகும். வடகிழக்கில் உள்ள அனைத்து ஆயுதக் குழுக்களும், ஜனநாயக செயல்முறையின் ஒரு பகுதியாகவும், பிராந்தியம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் தங்கள் பங்களிப்பை வழங்கவும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பிரதமர் மோடியின் ஆட்சியில், பிரதம மந்திரி வடகிழக்கு மேம்பாட்டு முன்னெடுப்பு (Prime Minister's Development Initiative for North-East) திட்டத்தின் கீழ், மிசோரத்தில் “மூங்கில் இணைப்புச் சாலைகள்” உள்ளிட்ட உள் கட்டமைப்பு மற்றும் தேவை சார்ந்த சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள 8 மாநிலத் தலைநகரங்களும் 2025ஆம் ஆண்டுக்குள் விமானம், ரயில் மற்றும் சாலை மூலம் இணைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.