வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: '' எழுத்தின் மூலம் ஜாதி உணர்வையும், மத உணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடாது'', என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
வானவில் பண்பாட்டு மையம் மற்றும் தி டச்சஸ் கிளப் சார்பில் சரஸ்வதி சம்மான் -2022 விருது பெற்ற எழுத்தாளர் சிவசங்கரிக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் சிவசங்கரியை பாராட்டி பரிசு வழங்கி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், எழுத்தாளருக்கு விருது வழங்கும் விழாவை பண்டிகை போல் கொண்டாட வேண்டிய விஷயம். படிப்பது குறைந்துவிட்டது என்ற எண்ணம் உள்ளது. ஆனால், அப்படி இல்லை. எழுத்துக்கு இருக்கும் மரியாதை முன்பு போல் இன்றும் உள்ளது.
திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் என கூட்டத்தில் பேசும்போது அந்த வார்த்தைக்கு உரிய பலமும் சக்தியும் உள்ளது. இன்றும் அந்த எண்ணத்தில் சக்தியும், சிந்தனையும் மதிப்பும் இருக்கத்தான் செய்கிறது. அது பழங்காலம் என்று ஒதுக்கி வைப்பது இல்லை. புத்தகத்தை படிக்க படிக்க நம்மை பற்றி நாமே யோசிப்போம். புத்தகம் என்பது ஒரு கண்ணாடி. நாமை நாமே அதில் பார்க்கிறோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில் சுயசரிதை என்பது மிகுந்த இஷ்டம். இன்னொருவரை பற்றி தெரிந்து கொண்டு சுயசரிதை எழுதுவது சிறப்பானது. இளைஞர்கள் புதுமையாக தொடங்கும் முயற்சிகளுக்கு பிரதமர் அதிகம் உதவி வருகிறார். தமிழகத்தில் வாழ்ந்த ஜிடி நாயுடு தான் அனைவரையும் விட அதிகம் புதுமையான கண்டுபிடிப்புகளை கொண்டு வந்தவர்.

நாம் எல்லாரும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான கருத்தாக, நம்முடைய எழுத்து இருக்க வேண்டும். மனிதனை மனிதன் வெறுக்கும் அளவுக்கு எழுத்து இருக்கக்கூடாது. எழுத்தின் மூலம் ஜாதி உணர்வையும், மத உணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடாது.
கணியன் பூங்குன்றனார் ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'' என்று சொன்னதை தான் பிரதமர் பின்பற்றுகிறார். இந்த வாசகம் தான் ஜி20 மாநாட்டிற்கான 'லோகோ'வில் ''வசுதேவக குடும்பகம்'' எனவும், '' ஒன் எர்த் ஒன் பேமிலி'' என ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டு உள்ளது.
சிறியோர்களை இகழ்வாக பார்க்க வேண்டாம். பெரியவர்களை பார்த்து பயப்பட வேண்டாம். நடுநிலைமையாக இருங்கள். பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் ஒரு அணுகுண்டு போன்றது. மனதில் உத்வேகத்தையும் எழுச்சியையும் கொடுக்கும். இன்று குழந்தைகள் பாடிய பாரதி பாடல் எனக்கு அதிக ஆற்றலை அளித்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.