வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் புதுடில்லி இடையேயான 11 வது வந்தே பாரத் ரயிலை இன்று(ஏப்ரல் 01) பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த ரயில் 706 கி.மீ தொலைவை 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி நிலையத்தில், போபால் மற்றும் புதுடில்லி இடையேயான, 11வது வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
ரயிலின் சிறப்பம்சங்கள்:
இந்த ரயில் இரு நகரங்களுக்கும் (போபால் - டில்லி) இடையே மொத்தம் 706 கி.மீ தொலைவு இருக்கிறது. இந்த தொலைவை வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.
இது நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலாகும். என்னதான் சதாப்தி ரயில் வேகமான ரயிலாக இருந்தாலும், போபாலிலிருந்து டெல்லி வந்து சேர 8 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆனால் இந்த வந்தே பாரத் ரயில் 7.50 மணி நேரத்தில் கடந்து விடும்.
ரயில் வாரத்தில் 6 நாட்களுக்கு இயக்கப்படும். அதாவது போபாலிலிருந்து விடியற்காலை 5.55 மணிக்கு புறப்படும், இந்த ரயில் காலை 11.40 மணியளவில் ஆக்ரா வந்து சேரும். பின்னர் ஆக்ரா கான்ட் ஸ்டேஷனில் 5 நிமிடம் நின்றுவிட்டு பின்னர் கிளம்பி சரியாக மதியம் 1:45 மணிக்கு டில்லிக்கு வந்து சேரும்.
அதேபோல் திரும்ப ரயில் மதியம் 2:45 மணிக்கு புதுடில்லியிலிருந்து வந்தே பாரத் ரயில் புறப்படும். இது மாலை 4.45 மணிக்கு ஆக்ராவை வந்தடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10.45 மணியளவில் போபாலின் ராணி கமலாபதி ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த ரயில் மத்திய பிரதேசம், டில்லி இடையேயான இணைப்பை அதிகரிக்கும்.

ரயிலை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
நமது நாட்டின் திறமை, ஆற்றல் மற்றும் நம்பிக்கையை வந்தே பாரத் ரயில்கள் எடுத்து காட்டுகின்றன. மக்களிடம் கெஞ்சுவதை மட்டுமே முந்தைய அரசுகள் பின்பற்றின. ஆனால், தற்போதைய அரசு மக்களின் தேவை மற்றும் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது.
வந்தே பாரத் ரயில்களில் 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. தொழில்நுட்ப வசதி நிறைந்த இந்த ரயில்கள், சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. நேரத்திற்கு இயக்கப்படுவதுடன், கள்ளச்சந்தையில் விற்பனை என்ற கேள்விக்கு இடமில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
ஆலோசனை
போபால் ரயில் நிலையத்தில், ரயிலில் பயணம் செய்த மாணவிகள் மற்றும் ரயில் ஊழியர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.