வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹரித்வார்: ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து அவதூறாக பேசியதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஹரித்வார் நீதிமன்றத்தில் அந்த அமைப்பை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'மோடி ' எனும் ஜாதியை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், ராகுலுக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவர் எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து அக்கட்சி மூத்த தலைவர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான வழக்கறிஞர் கமல் பதூரியா என்பவர் ஐபிசி பிரிவு 499 மற்றும் 500 ஆகியவற்றின் கீழ் ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி வழக்கை ஏப்.,12 க்கு ஒத்திவைத்தார்.

'பாரத் ஜோடோ' யாத்திரையின் போது ஹரியானாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ஆர்எஸ்எஸ் அமைப்பை, கவுரவர்களுடன் ஒப்பிட்டு பேசினார். நவீன இந்தியாவின் கவுரவர்கள், கூட்டங்களை நடத்தி வருகின்றனர் எனக்கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கமல் பதூரியா வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கு தொடர்பாக அவர் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் அமைப்பை கவுரவர்களுடன் ஒப்பிட்டு ராகுல் பேசியது அநாகரீகமானது. இது அவரது மனநிலையை காட்டுகிறது. எங்கு எல்லாம் இயற்கை பேரிடர் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் தாமாக சென்று உதவும் அமைப்பாக ஆர்எஸ்எஸ் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பாட்னா நீதிமன்றம் உத்தரவு
இதனிடையே, 'மோடி' எனும் ஜாதியை அவதூறாக விமர்சித்து பேசியது தொடர்பாக பா.ஜ., எம்.பி., சுஷில்குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் 12ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.