திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த, 20 வயது இளம்பெண், ஆடு மேய்த்து வருகிறார். இவர், கடந்த 3 ஆண்டுக்கு முன், தனியார் கம்பெனியில் வேலை பார்த்தபோது, அங்கு மதுபாலா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஆறு மாதத்திற்கு பின், கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து விட்டனர். பின், தாங்கள் வளர்த்து வரும் ஆடுகளை மேய்த்து வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 65, என்பவர், அவரது கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அந்த பெண்ணிடம் நெருங்கி பழகி, பல முறை பாலியல் உறவு வைத்துள்ளார். இதில், அந்த பெண் கர்ப்பமடைந்தார்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி, அவருக்கு பெண் குழந்தை பிறந்து, சில நிமிடங்களில் இறந்து விட்டது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், கிருஷ்ணனிடம் கேட்டபோது, அவர் ஆபாசமாக திட்டி, மிரட்டியதாக, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.
புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து, கிருஷ்ணனை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.