ஊத்துக்கோட்டை:எல்லாபுரம் ஒன்றியம், காக்கவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 64. விவசாயி. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட இவர், மருத்துவம் பார்த்து வருகிறார்.
மாதம் ஒரு முறை சென்னை அரசு மருத்துவமனைக்கு சென்று, மாத்திரை வாங்கி வருவது வழக்கம். கடந்த 30ம் தேதி, வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு, சென்னைக்கு சென்று மருந்து வாங்கிக் கொண்டு, சென்னை சாலவாக்கத்தில் உள்ள தன் மகள் வீட்டில் தங்கினார்.
நேற்று முன்தினம் காலை, வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பது குறித்து, கிருஷ்ணகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வீட்டிற்கு வந்த கிருஷ்ணகுமார், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த, 19 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, கிருஷ்ணகுமார் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இப்புகாரின்படி, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.