வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாழப்பாடி:சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் சூரிய ஒளி மின் வசதி ஏற்படுத்த, பா.ம.க., சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் விஜயராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் உள்ள குப்பனூர் பகுதியில் இருந்து ஏற்காடு செல்லும் பிரதான சாலையில், கடந்த வருடம் பெய்த கனமழையின் காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, அப்பகுதியில் சுற்றுச்சுவர், சாலைகள் கடுமையாக சேதம் அடைந்தது.
இதன் பின்னர், அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து பழுதடைந்த சாலை மற்றும் தடுப்புச் சுவர்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பழுதான சாலைகளை சீரமைக்க குரல் கொடுத்த பா.ம.க., மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்க்கும் , சீரமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கும் சேலம் வடக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோல், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கக்கூடிய ஏற்காட்டில் வருந்தோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், குப்பனூர் பகுதியில் இருந்து ஏற்காட்டிற்கு செல்லும் சாலையில் சூரிய ஒளி மின் வசதி ஏற்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகளின் உயிர்களையும்,உடைமைகளையும் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.