கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டத்தில் மார்ச்.,30ம் தேதி நடந்த, ராமநவமி விழா கொண்டாட்டத்தில், வன்முறை வெடித்தது.
இந்த வன்முறை சம்பவத்தில், வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இது குறித்து, ஹவுரா போலீஸ் கமிஷனர் பிரவீன் திரிபாதி கூறுகையில்,‛ பொது மக்கள் அச்சப்படத்தேவையில்லை ; கலவரம் நடந்த பகுதிகளில், நிலைமை கட்டுக்குள் உள்ளது சம்பவம் தொடர்பாக, 2 வழக்குகள் பதியப்பட்டு, 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, போலீசார், ‛ஏரியா ஆதிக்க பயிற்சி'கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்,' என்றார்.
இதற்கிடையில், வன்முறை தொடர்பாக, ஐ.ஜி., சுனில் சவுத்ரி தலைமையிலான, சிறப்பு குற்றப்புலனாய்வு பிரிவு விசாரிக்க, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
அதேநேரம், சம்பவம் குறித்து, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து, கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, அம்மாநில எதிர்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரியும், மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை, நாளை மறுநாள் (ஏப்.,3)ல் விசாரணைக்கு வருகிறது.