வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி வீடு வாங்கி கொடுப்பதாக கூறி, 96 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகர பகுதியிலும், சுற்றியுள்ள கிராமங்களிலும், குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கப்பட்டது. நீர்நிலை புறம்போக்கில் வசிப்பவர்கள், துப்புரவு பணியாளர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருப்பூர் சுற்றுப்பகுதியில், அடுக்குமாடி வீடு வாங்கி கொடுப்பதாக, சிலர் தீவிரவசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், வீடு வாங்கி கொடுப்பதாக கூறி, பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்தது.
திருப்பூர் வடக்குப்பகுதியை சேர்ந்த மக்கள், வீடு வாங்கி கொடுப்பதாக பணம் வாங்கி ஏமாற்றியதாக, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தனர்.
கமிஷனர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப்படி, இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை, இதுதொடர்பான விசாரணையை மேற்கொண்டது.
கணக்கம்பாளையத்தை சேர்ந்த முருகன், 27 மற்றும் போயம்பாளையம், அவிநாசி நகரை சேர்ந்த கனகராஜ்,44, அவிநாசியை சேர்ந்த பழனிசாமி, 60 ஆகியோார், 63 நபர்களிடம், 96 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, நேற்று குற்றவாளிகள் மூன்று பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'மத்திய குற்றப்பிரிவு போலீஸ், மூன்று பேரையும் கைது செய்து, ஒரு காரையும் பறிமுதல் செய்துள்ளது. கட்டுமான கான்ட்ராக்டராக இருந்த கனகராஜ், வீடு கட்டும் பணியை செய்வதால், தனக்கு, 10 வீடுகள் ஒதுக்கப்படும் என்று கூறி, பணம் வசூலித்து வந்துள்ளார்.
எல்.ஐ.சி., முகவர் பழனிசாமி, கனகராஜின் டிரைவர் முருகன், புரோக்கராக செயல்பட்டுள்ளனர். முத்திரைத்தாளில், போலியாக எழுதி கொடுத்து, நுாதன முறையில் பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
விசாரணையின் மூலமாக, மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,' என்றனர்.