வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
வி.மாரிமுத்து, துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'எங்கள்தாய்மொழியை தள்ளி வைக்கச் சொல்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம். தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதை கேளுங்கள்... மக்களின் உணர்வுகளை மதியுங்கள்; ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள்.குழந்தையை கிள்ளிவிட்டு சீண்டி பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும்வேண்டாம். தொட்டிலை ஆட்டும் முன்னால் தொலைந்து விடுவீர்கள்' என, மத்திய பா.ஜ., அரசை எச்சரிக்கும் விதமாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்,
முதல்வர் ஸ்டாலின். 'ஆவின் நிறுவனம் விற்பனைக்கு அனுப்பும் தயிர் பாக்கெட்டுகளில், 'தஹி' என, ஹிந்தியில் அச்சிட்டு இருக்க வேண்டும்' என, தர நிர்ணய ஆணையம்உத்தரவிட்டிருந்தது. அதற்காகவே ஸ்டாலின் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அதன்பின், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அந்த
உத்தரவை வாபஸ் பெற்று விட்டது.
![]()
|
இருப்பினும், சில விஷயங்களை சொல்ல வேண்டியுள்ளது... அதாவது, 'துாண்டில்காரனுக்கு தக்கையிலேயே கண்' என்பர். அதுபோல, வியாபாரிகளுக்கு வியாபாரத்தின் மீது தான் கண் இருக்குமே அன்றி, மொழியின் மீது இருக்காது. தமிழகத்தில் அடகு கடைகளை நடத்துவோர் குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள்; அவர்களது தாய்மொழி ஹிந்தி மற்றும் குஜராத்தி. அந்த அடகு கடைகளில், அவர்களின்பெயர்களை சின்ன எழுத்துக்களில் எழுதி வைத்து, 'அடகு கடை' என்பதை மட்டும் கொட்டை எழுத்துக்களில் எழுதி வைத்திருப்பர்.
அந்தப் பெயர் பெரிதாக இருந்தால் தான், அடகு வைக்க வருபவர்கள் கடையை தேடி வருவர். அதேபோல, மார்வாடிகளும், வட மாநிலத்தவரும் வசிக்கும் சென்னை சவுகார்பேட்டை போன்ற பகுதிகளில், தேர்தல் நேரத்தில் கழகத்தினர், 100 சதவீதம் ஹிந்தியாலான, 'போஸ்டர்'களை ஒட்டித் தான் ஓட்டு கேட்பது வழக்கமாக உள்ளது; இதை, யாராலும் மறுக்க முடியாது. இப்போது என்னமோ, மொழித் திணிப்பு என்று பூச்சாண்டி காட்டியுள்ளார் ஸ்டாலின்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அவர்கள், தமிழக அரசு விற்கும் தயிரை வாங்கி பயன்படுத்தட்டும் என்ற உயர்ந்த நோக்கில், தயிர் பாக்கெட்டுகளில், 'தஹி' என்று அச்சிட சொன்னதை, மொழித் திணிப்பு, வெங்காயத் திணிப்பு என்று வேடிக்கை காட்டி விட்டனர், கழக ஆட்சியாளர்கள். ஏன் ஆவின் விற்பனைக்கு அனுப்பும் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளில், ஆங்கிலம் மற்றும் தமிழில் அச்சிட்டு அனுப்புகிறீர்கள்?
உண்மையான தமிழ்ப் பற்று உங்களுக்கு ஊனோடும், உதிரத்தோடும், உயிரோடும், உணர்வோடும் கலந்து இருந்தால், எந்த மொழியிலும் பெயர் பொறிக்காமல், வெறுமனே சிவப்பு, ஆரஞ்சு, நீலம், பச்சை நிறங்களில் மட்டுமே ஆவின் பால் கவரையும், இன்ன பிற தயாரிப்புகளையும் அச்சிட்டு விற்பனைக்கு அனுப்பலாமே... செய்வீர்களா?
ஆக மொத்தத்தில், ஆவின் நிறுவனத்திற்கு மூடுவிழா நடத்தும் முனைப்புடன், முழுவீச்சுடன் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் செயல்படுவது தெளிவாக
தெரிகிறது. நடத்துங்கள்... நடத்துங்கள்... ஆவினை தகப்பன் துவக்கி வைத்தார்; தனயன் மூடி வைப்பார்!