கோட்டயம், ''மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக போராட, தேர்தலில் வெற்றி பெற, மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,'' என, தமிழக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ.,வைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.
![]()
|
இங்கு, கொல்லத்தை அடுத்துள்ள வைக்கத்தில், கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அனுமதிக்கக் கோரி, 1924 - 1925ல் போராட்டம் நடந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த, திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., இந்தப் போராட்டத்தை வழிநடத்தினார்.
இதன் நுாற்றாண்டையொட்டி, வைக்கத்தில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.
இதில் பங்கேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சமூக நீதிக்காக, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பலர் தலைவர்கள் போராடினர். இவர்களில் ஸ்ரீ நாராயண குரு, அய்யன் காளி, டி.கே. மாதவன், ராமலிங்க அடிகளார், அய்யா வைகுண்டர், அயோத்திதாசர், ஈ.வெ.ரா., ஆகியோர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள்.
வைக்கம் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றவர்களை அரசியல் கைதிகளாக நடத்தினர். ஆனால், ஈ.வெ.ரா., மட்டும் ௭௪ நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார்.
மனிதநேயம், சுயமரியாதை, சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், சமூக நீதி உள்ளிட்டவற்றுக்காக போராடியவர், ஈ.வெ.ரா., அவருடைய சிந்தனைகள், கோட்பாடுகளை, வரும் இளைய சமுதாயத்தினரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில், எவ்வித பேதமும் இல்லாமல், தமிழக, கேரள அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
ஜாதி, மத ரீதியிலான சனாதன, வர்ணாசிரம சிந்தனைகள் தற்போது மீண்டும் தலைதுாக்கியுள்ளன. இதை தடுக்க வேண்டியது நம் கடமை. இந்த சிந்தனைகளை துாண்டி விடும் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிராக, மதச்சார்பற்ற, ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement