அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி:
அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றுள்ளார். இது, நீண்ட சட்டப் போராட்டம். பழனிசாமிக்கு தான் இரட்டை இலை என்று வந்தாலும், இரட்டை இலை பலவீனப்பட்டு வருகிறது.
வருங்காலத்தில் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் கட்சியை, சின்னத்தை மீட்டெடுப்போம். துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை.அடடா... கீறல் விழுந்த ரிக்கார்டு கூட சில நேரங்கள்ல ஒரு வரியை மாத்தி பாடிடும்... இவர், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையா இருக்கிறாரே!
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேச்சு:
பருவ நிலை மாற்றம் என்ற சொல், உலகெங்கும் அதிகமான மக்களை ஈர்த்துள்ளது. பருவநிலை மாற்றத்தால், மிகப்பெரிய சவால்களை வளரும் நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்பட உள்ளது. இரண்டாவது பெரிய பொருளாதாரமும் மற்றும், 1,076 கி.மீ., நீள கடற்கரையும் உடைய ஒரே மாநிலம் தமிழகம்.
அதேபோல, இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமும் இது தான்.அந்த இயற்கை சீற்றங்களில் இருந்து தற்காத்து கொள்வதற்கு, இதுவரை பல முறை தமிழகத்தை ஆண்ட இவரது கட்சி என்ன நடவடிக்கை எடுத்திருக்குது?
முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ம.க., தலைவர் அன்புமணி கடிதம்:
சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மார்ச், 22-ல் நடந்த கிரிக்கெட் போட்டியின் போது, 'பான் பஹார், சைனி கைனி' உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விளம்பரங்கள், சட்ட விரோதமாக காட்சிப்படுத்தப் பட்டன. விளம்பரங்களால் சிறுவர்கள், இளைஞர்கள் புதிதாக புகையிலைக்கு அடிமையாகின்றனர்.
எனவே, ஐ.பி.எல்., போட்டிகளின் போது, சேப்பாக்கம் மைதானத்தில், புகையிலை பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்.போதைப் பொருட்களுக்கு எதிராக அடிக்கடி முழங்கும் முதல்வர், இந்த விஷயத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பாரா அல்லது, 'கிரிக்கெட்டுக்கும், மாநில அரசுக்கும்சம்பந்தம் இல்லை'ன்னு ஒதுங்கிடுவாரா?
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை:
கலாஷேத்ராவில், 10 ஆண்டுகளாக, மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இக்கொடுமைக்கு எதிராக மாணவியர் வீதியில் இறங்கி போராடியும், தொடர்புடைய ஆசிரியர்களை தமிழக போலீஸ் துறை கைது செய்யாமல், ஒருதலை சார்பாக நடந்து கொள்வது வன்மையான கண்டனத்துக்குரியது.
குற்றச்சாட்டு சம்பந்தமா லேட்டாகத் தானே புகார் கொடுத்திருக்காங்க, சட்டசபையில் முதல்வர் உறுதி அளித்திருப்பதால், போலீசார் நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பலாம்!
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:
ராகுல் மீது அவதுாறு வழக்கு, எம்.பி., பதவி தகுதி நீக்கம் என்பது திட்டமிட்ட சதி. இதைக் கண்டித்து, வி.சி., கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. வரும், 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில், 'ஜனநாயகம் காப்போம்' என்ற அறப்போராட்டத்தில் ஈடுபடுவதுடன், அம்பேத்கர் சிலை முன் அமர்ந்து உறுதிமொழி ஏற்கவும் உள்ளோம்.
கூட்டணி தர்மத்துக்காக, ஓவராவே குரல் கொடுக்கிறாரே... ராகுல் தகுதி நீக்கத்துல, காங்கிரசார் கூட இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படலையே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
அ.தி.மு.க., ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட, பள்ளி மாணவ - மாணவியருக்கான, காலை சிற்றுண்டி திட்டம், 'அட்சய பாத்திரம்' என்ற பெயரில், தனியார் தொண்டு நிறுவனத்தால் நடத்தப்பட்டு வந்தது. அது, அரசின் திட்டமல்லஎன்று, தி.மு.க.,வினர் சொல்லி வந்த நிலையில், சட்டசபையில் கவர்னர் மாளிகை வழியாக, அரசுப் பணம் அந்த திட்டத்திற்கு செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற உண்மையை, நிதி அமைச்சரே ஒப்புக் கொண்டிருக்கிறார்.
எனவே, எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டம் போல, காலை சிற்றுண்டி திட்டமும், அ.தி.மு.க.,வின் திட்டம் தான் என்பது நிரூபணமாகி விட்டது.அடடா... கவர்னர் மேல குற்றம்சொல்றேன்னு, உங்க ஆட்சியின்திட்டம் என்பது அம்பலத்துக்கு வந்துடுச்சே... பாவம், நிதி அமைச்சர்... மேலிடத்துல, 'வாங்கி கட்டியிருப்பாரோ?'
![]()
|
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
தரமான கல்வியை அளிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டிய பள்ளிக் கல்வித்துறை, அரசியல் கட்சி தலைவர்களின் சிலை நிறுவுவதில், மும்முரம் காட்டுவது கண்டிக்கத்தக்கது. அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கல்வித்துறை வளாகத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலை அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
அது சரி... கருணாநிதி கூடவே, 50 ஆண்டுகளாக வலம் வந்த அன்பழகன் சிலையை, அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு அருகில் வைப்பது தானே பொருத்தமாக இருக்கும்!
![]()
|
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
சென்னையின் பல்வேறு பகுதிகளில், சில நாட்களாக, ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பால்கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் போராட்டமும், அம்பத்துார் ஆலையில்ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறும் தான், ஆவின் பால் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசு தலையிட்டு, ஆவின் பால் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பால் உற்பத்தியாளர்களுடன் பேச்சு நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஆவின் நிர்வாகத்துல அடுத்தடுத்து பல குளறுபடிகள் நடந்துக்கிட்டே இருக்குது... நிர்வாகத்தில் 'நம்பர் ஒன்' மாநிலம் என்ற முதல்வரின் கனவுக்கு, இது வலு சேர்க்காது!