புதுடில்லி, லோக்சபா தேர்தலின்போது, பீஹாரில், வழக்கமான மேல் ஜாதியினர் ஓட்டுகளுடன், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஓட்டுகளையும் கவருவதற்கு, பா.ஜ., புதிய வியூகத்தை வகுத்துள்ளது. முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துக்கான ஆதரவு தளத்தை அசைத்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
பீஹாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்து, ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, முதல்வர் பதவியில் நிதிஷ்குமார் தொடர்ந்து வருகிறார்.
![]()
|
இக்கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளத்தைவிட, ராஷ்ட்ரீய ஜனதா தளம் மிகவும் வலுவான கட்சியாக உள்ளது. ஜாதி ரீதியிலும், மாநிலத்தில் அந்தக் கட்சிக்கு, யாதவர்களின் ஆதரவு அதிகம் உள்ளது.
கடும் போட்டி
இதையடுத்து, லோக்சபா தேர்தலின்போது, மாநிலத்தின், ௪௦ தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றுவதற்கான வியூகங்களை பா.ஜ., வகுத்து வருகிறது.
கடந்த, ௨௦௧௪ தேர்தலின்போது, சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ., ௩௯ சதவீத ஓட்டுகளுடன் ௩௧ தொகுதிகளில் வென்றது.
அப்போது போலவே, தற்போதும், பா.ஜ., தனித்து போட்டியிட உள்ளது. அதே நேரத்தில், மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி அமைத்துள்ளது. இதனால், போட்டி மிகக் கடுமையாகவே இருக்கும்.
இதையடுத்து, அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை பா.ஜ., வகுத்து வருகிறது. இதற்கு முன், ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து பா.ஜ., தேர்தலை சந்தித்துள்ளது.
அப்போது, இந்தக் கூட்டணிக்கு, மேல் ஜாதியினரின் ஓட்டுகளுடன், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ஓட்டுகளும் கிடைத்தன. ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் ஓட்டுகள், குர்மி சமூகத்தைச் சேர்ந்த நிதிஷ்குமாரின் கட்சிக்கே அப்போது அதிகம் கிடைத்தது.
இதையடுத்து, வரும் லோக்சபா தேர்தலில், வழக்கமான மேல் ஜாதியினர் ஓட்டுகளுடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் ஓட்டுகளை பெறுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோரில், யாதவர், குர்மிகளைத் தவிர மற்றவர்களின் ஆதரவை பா.ஜ., திரட்டி வருகிறது. மேலும், நிதிஷ்குமாரின் ஆதரவு தளத்தை அசைத்து பார்க்கும் வேலைகளிலும் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, குஷ்வாகா சமூகத்தினரின் ஓட்டுகளை குறிவைத்துள்ளது. மாநில மக்கள் தொகையில், இந்தப் பிரிவினர் ௮ சதவீதம் வரை உள்ளனர். இதையடுத்து, அந்த சமூகத்தைச் சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, பீஹார் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தானுக் சமூகத்தைச் சேர்ந்த ஷம்பு சரன் படேல், சமீபத்தில் ராஜ்யசபா எம்.பி.,யாக்கப்பட்டார்.
புதிய திட்டங்கள்
இந்நிலையில், குஷ்வாகா சமூகத்தில் பிறந்தவராக கருதப்படும் மவுரிய பேரரசர் அசோகரின் பிறந்த நாளையொட்டி நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா வருகை தர உள்ளார்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருடன், தலித் சமூகத்தினரின் ஆதரவையும் திரட்டும் வகையில், பல புதிய திட்டங்களை செயல்படுத்த பா.ஜ., திட்டமிட்டுள்ளதாக அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.