வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : ''இந்தியா - இலங்கை இடையே பயணியர் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்'' என மாநில நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு அறிவித்தார்.
நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளித்து அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:* மாநில நெடுஞ்சாலைகளில் மூன்று இடங்களில் வாகன நிறுத்தம் டிரைவர்கள் ஓய்வறை உணவகம் முதலுதவி மையம் எரிபொருள் நிலையம் பழுது பார்ப்பு மையம் உள்ளிட்ட சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும்.

* ஆறுவழி சாலைகள் எக்ஸ்பிரஸ் சாலைகள் உள்ளிட்டவற்றை அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போல் தாமதமின்றி முடிவுகள் எடுக்க மாநில நெடுஞ்சாலை ஆணையம் மீண்டும் உருவாக்கப்படும்.
* மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பள்ளங்கள் 24 மணி நேரத்திலும்; மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் இதர சாலைகளில் 72 மணிநேரத்தில் சரி செய்யும் திட்டத்தை செயல்படுத்த அலைபேசி செயலி உருவாக்கப்படும்.
* கொண்டை ஊசி வளைவு மற்றும் ஆபத்தான வளைவுகளில் வெளிநாட்டு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பில் உருளை விபத்து தடுப்பான்கள் அமைக்கப்படும்.
* விருதுநகர் - சிவகாசி முதலிய இடங்களில் 238 கோடி ரூபாயில் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கப்படும்.
* இந்தியா - இலங்கை இடையே ராமேஸ்வரம் - தலைமன்னார் ராமேஸ்வரம் - காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும். இதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் வேலு அறிவித்தார்.