மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில்களை நிர்வகிக்க மீண்டும் இணை கமிஷனர் அந்தஸ்தில் பதவியை உருவாக்கி அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. 10 மாதங்களுக்கு முன் இணைகமிஷனர் பணியிடம் துணைகமிஷனராக தகுதி குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோயில் வருவாய், பக்தர்களின் வருகையின் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை நிர்வகிக்க இணைகமிஷனர் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
மீனாட்சி அம்மன், ராமேஸ்வரம் கோயில்களிலும் இதே நடைமுறைதான் இருந்தது. கடந்த மே மாதம் ஹிந்து அறநிலையத்துறையில் 30 உதவிகமிஷனர்களுக்கு ஒரே நேரத்தில் துணைகமிஷனராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
![]()
|
இவர்களுக்குரிய பணியிடங்கள் இருந்தாலும் 'அரசியல்' காரணங்களுக்காக மதுரை, ராமேஸ்வரம், திருவேற்காடு, திருத்தணி கோயில்களின் இணைகமிஷனர் பதவி துணைகமிஷனராக தகுதி குறைக்கப்பட்டது.
மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிேஷக பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் துணைகமிஷனர் அந்தஸ்தில் அதிகாரி நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்படும் நிர்வாக குழப்பங்கள், பாதிப்புகள் குறித்து தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதற்கிடையே கோயிலின் வீரவசந்தராய மண்டபம் சீரமைப்பு பணி துவங்கி ஒருவாரமாக நடந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிேஷகம் நடத்துவதற்காக திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதன் அடிப்படையில் நிர்வாக காரணங்களுக்காக மீனாட்சி கோயில் துணைகமிஷனர் பணியிடம் இணைகமிஷனராக மீண்டும் பதவி உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் ராமேஸ்வரம் உட்பட 3 கோயில்களிலும் இணைகமிஷனர் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் இதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.