வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : கலாஷேத்ரா கல்லுாரியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மத்திய கலாச்சார துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்படும் கலாஷேத்ரா நாட்டிய கல்லுாரியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து கல்லுாரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது.
அதன்பின் இந்த விவகாரம் அடங்கிய நிலையில் கல்லுாரியில் மீண்டும் பாலியல் தொல்லை பிரச்னை எழுந்துள்ளது. பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![]()
|
இதற்கிடையே 2015 முதல் 2019ம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவி சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில் 'கலாஷேத்ரா கல்லுாரி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்து உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்தார்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இம்மூன்றும் கடுமையான சட்டப் பிரிவுகள். தற்போது பேராசிரியர் ஹரிபத்மன் ஐதராபாத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால் அவரை பிடிக்க தனிப்படை அங்கு விரைந்துள்ளது.
மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினார். மாணவியர் சிலர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர்.இந்நிலையில் கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.