தமிழக நிகழ்வுகள்
ரூ.2,400 கோடி மோசடி பிரபல நடிகர் ஓட்டம்?
சென்னை-'ஆருத்ரா கோல்டு' நிறுவன மோசடி வழக்கில் நடிகரும், பா.ஜ., நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருக்கிறதா என, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
![]()
|
சென்னை, அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த, 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட முதலீடுகளை மோசடி செய்தது.
ஒரு லட்சம் பேரிடம், 2,438 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் மேலாண் இயக்குனர்கள் உட்பட, 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதில், பாஸ்கர், ரூசோ, ஹரிஷ் உள்ளிட்ட, 11 பேர் கைதாகி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை தனித்தனியாக காவலில் எடுத்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில், ரூசோவிடம் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில், நடிகரும், பா.ஜ., நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்ட நிலையில், அவர் தமிழகத்தில் இல்லை என, தெரிய வந்துள்ளது.
முக்கிய குற்றவாளிகளை போல சுரேஷும், வெளிநாடு சென்று தலைமறைவாகி விட்டாரா என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஹரீஷ் என்பவர், நடிகர் சுரேஷுக்கு நெருங்கிய நண்பர் என்று கூறப்படுகிறது. அதனால், சுரேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பெண் வி.ஏ.ஓ.,விற்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திருக்கோவிலுார்-திருக்கோவிலுார் அருகே வி.ஏ.ஓ., விற்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி ஜீவா, 40; கிராம நிர்வாக அலுவலர். கடந்த 28ம் தேதி இவருடன் நில அளவையர்களும் சேர்ந்து பாட்டை புறம்போக்கு இடத்தை அளவீடு செய்யச் சென்றனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் திரும்பி வந்து விட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே ஊரைச் சேர்ந்த லுார்சாமி மகன் சக்கரை ஏசு, 45; மற்றும் பாபு ஆகியோர் வி.ஏ.ஓ., ஜீவாவின் மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த கொலை மிரட்டல் குறித்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து சக்கரை ஏசுவை கைது செய்தனர். பாபுவைத் தேடி வருகின்றனர்.
மாணவியிடம் சில்மிஷம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே பஸ்சில் மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை தாலுகா ஏ. மழவராயனுாரைச் சேர்ந்தவர் கொளஞ்சி மகன் டேவிட் என்கிற தேவா, 21; இவர், அப்பகுதியில் இருந்து உளுந்துார்பேட்டை செல்லும் தடம் எண்.12 அரசு டவுன் பஸ்சில் சென்றார்.
அப்போது பள்ளிக்குச் சென்ற பிளஸ் 2 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேவாவை கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.
பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேரில் விபசாரம் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் மற்றும் போலீசார் நேற்று காலை 10:30 மணியளவில் ஏமப்பேர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அதில், ஏமப்பேரைச் சேர்ந்த மனோகர், 63; என்பவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிந்தது. உடன், மனோகரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.
பொதுமக்களுக்கு இடையூறு மது அருந்திய 4 பேர் கைது
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே பொதுமக்களுக்கு இடையூறாக மது அருந்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருகே சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக திருநாவலுாரைச் சேர்ந்த சுபாஷ், 23; சுந்தர், 32; ஆகியோரை கைது செய்தனர்.
அதேபோல் வி.கே.எஸ்., நகர் பகுதியில் மது அருந்திய அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ், 38; உளுந்துார்பேட்டை புது தெருவைச் சேர்ந்த தண்டபாணி, 35; ஆகியோர் மீது உளுந்துார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது வழக்கு
உளுந்துார்பேட்டை-உளுந்துார்பேட்டை அருகே பெண்ணைத் தாக்கிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த அங்கனுாரைச் சேர்ந்தவர் வீராசாமி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப். இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 18ம் தேதி வீராசாமி மகளை, சந்தீப் மற்றும் அவரது தரப்பினர் திட்டி தாக்கினார்.
இதனை வீராசாமி அவரது மனைவி வீரம்மாள் ஆகியோர் தடுத்து மறித்த போது அவர்களையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
வீரம்மாள் கொடுத்த புகாரின் பேரில், சந்தீப், பாலாஜி, பிரசன்னா, குமரவேல், சத்யராஜ் ஆகிய 5 பேர் மீது உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப்ப திந்து விசாரித்து வருகின்றனர்.
'
ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி இரண்டு குற்றவாளிகள் கைது
சென்னை-'ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளிகள் இருவரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக வைத்து, ஹிஜாவு என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனம், முதலீடு செய்தவர்களுக்கு, 15 சதவீதம் வட்டி தருவதாக ஆசைகாட்டி, 89 ஆயிரம் பேரிடம், 4,400 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது.
பணத்தை இழந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஹிஜாவு நிறுவனம் மற்றும் அதன் 19 துணை நிறுவனங்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிறுவனத்தின் இயக்குனர், தலைவர், துணை நிறுவன இயக்குனர்கள், கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட, 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில், நிறுவன தலைவர் சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.
தலைமறைவாக உள்ள இயக்குனர் அலெக்சாண்டர், அவரது மனைவியும், நிறுவத்தின் மற்றொரு இயக்குனருமான மகாலட்சுமி உள்ளிட்டோரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த ஹிஜாவு நிறுவன இயக்குனர்களில் ஒருவரான கலைச்செல்வி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், ரவிச்சந்திரன் தன் பெயரிலேயே, சென்னை அண்ணாநகர் மேற்கில், துணை நிறுவனத்தை நடத்தி, 300 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்று, ஹிஜாவு நிறுவனத்துக்கு அனுப்பியது தெரிய வந்தது.
இதில் கிடைத்த கமிஷன் தொகையில், இரண்டு சொகுசு கார்கள் வாங்கியதுடன், திண்டுக்கல் மாவட்டம் பழநியில், 5 கோடி ரூபாய்க்கு நிலம் வாங்கி உள்ளார்.
மேலும், 2 கோடி ரூபாயில், தேவக்கோட்டையில் நிலம் வாங்கி உள்ளார்; காரைக்குடியில் வீடு கட்டி உள்ளார். அதற்கான ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக, 13 ஆயிரம் புகார் மனுக்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் விரைவில் தங்களது புகார் மனுவை அளிக்கும்படி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கலாஷேத்ரா கல்லுாரி பேராசிரியர் தலைமறைவு?
சென்னை-கலாஷேத்ரா கல்லுாரியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கைது செய்ய, போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
![]()
|
மத்திய கலாச்சார துறையின் கீழ், சென்னை திருவான்மியூரில் செயல்படும், கலாஷேத்ரா நாட்டிய கல்லுாரியில், மாணவியருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக, கடந்த ஆண்டு புகார் எழுந்தது. இதுகுறித்து, கல்லுாரி நிர்வாகம் கமிட்டி அமைத்து விசாரணை நடத்தியது.
அதன்பின், இந்த விவகாரம் அடங்கிய நிலையில், கல்லுாரியில் மீண்டும் பாலியல் தொல்லை பிரச்னை எழுந்துள்ளது. பேராசிரியர் ஹரிபத்மன், உதவியாளர்கள் சாய் கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகிய நான்கு பேர் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளனர்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, 2015 முதல் 2019ம் ஆண்டு வரை, கலாஷேத்ரா கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவி, சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 'கலாஷேத்ரா கல்லுாரி பேராசிரியர் ஹரிபத்மன் பாலியல் தொல்லை கொடுத்து, உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்தார்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில், போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தற்போது, பேராசிரியர் ஹரிபத்மன், ஐதராபாதில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுவதால், அவரை பிடிக்க தனிப்படை அங்கு விரைந்துள்ளது.
ஆணையம் உத்தரவு!
மாநில மகளிர் ஆணைய தலைவர் குமரி, நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினார். மாணவியர் சிலர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். இந்நிலையில், கலாஷேத்ரா இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி ஆகியோர் நாளை நேரில் ஆஜராக, ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய நிகழ்வுகள்
விமான பெண் ஊழியருக்கு 'செக்ஸ்' தொல்லை தந்தவர் கைது
மும்பை-'இண்டிகோ' விமானத்தில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், தென்கிழக்காசிய நாடான தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து சமீபத்தில் மும்பைக்கு வந்தது.
![]()
|
இதில் பயணித்த ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த எரிக் ஹரால்டு ஜோனாஸ், 63, என்பவர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தார்.
விமானத்தின் பெண் ஊழியரிடம், தனக்கு மீன் உணவு வேண்டும் என்றார்.
அதற்கு அந்த பெண், 'எங்களிடம் மீன் உணவு இல்லை. சிக்கன், மட்டன் உணவு மட்டுமே உள்ளது' என்றார். இதனால், அந்த பெண்ணுடன் அவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பின், உணவை வாங்கியதும், ஏ.டி.எம்., கார்டை கொடுக்கும்போது, அந்த பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.
விமானம் மும்பையில் தரையிறங்கியதும் விமான நிறுவனம் சார்பில் இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே, அந்த ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரின் வழக்கறிஞர் கூறுகையில், 'என் கட்சிக்காரருக்கு உடல் ரீதியான குறைபாடுகள் உள்ளன.
'மற்றவர்கள் உதவியின்றி, அவரால் எந்த பொருளையும் பிடிக்க முடியாது. ஏ.டி.எம்., கார்டை கொடுத்தபோது யதார்த்தமாக நடந்த சம்பவம், மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம்' என்றார்.
67 கோடி நபர்களின் தகவல்களை திருடி விற்றவர் அதிரடி கைது
ஹைதராபாத்-நம் நாட்டில் உள்ள 24 மாநிலங்கள், எட்டு பெருநகரங்களைச் சேர்ந்த 66.9 கோடி தனி நபர்கள் மற்றும் அமைப்புகளின் தகவல்களைத் திருடி விற்ற நபரை தெலுங்கானா போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளின் தகவல்கள் திருடி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
குறிப்பாக, ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்துள்ள சைபராபாத் நகரில், அதிகளவில் தகவல் திருட்டு நடப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் வினய் பரத்வாஜ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள், ராணுவ வீரர்கள், வங்கி களின் கடன் மற்றும் வங்கி கணக்கு அட்டை வைத்திருப்போர், கடன் கேட்டு விண்ணப்பித்தவர்கள், 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்டோரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, சாலை போக்குவரத்து நிறுவனங்கள், சுற்றுச்சூழல் வர்த்தக இணையதளங்கள் போன்றவற்றின் முகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவையும் திருடப்பட்டு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 24 மாநிலங்கள், எட்டு பெருநகரங்களில் வசிக்கும் 66.9 கோடி நபர்களின் தகவல்கள் திருடப்பட்டு, ஹரியானாவின் பரிதாபாதில் உள்ள இணையதள முகவரி வாயிலாக விற்கப்பட்டுள்ளன.
வினயிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், இரண்டு 'லேப்டாப்'கள் மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் தகவல்கள் உட்பட 135 பிரிவுகளின் தரவுகள் அடங்கிய பட்டியல் கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம், தேச பாதுகாப்பு மற்றும் தனிநபர் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்த விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.