வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் சொத்து வரி, கட்டட அனுமதி உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதாக பெறும் வகையில், வீடுகள் தோறும் 'க்யூ.ஆர்., கோடு' திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக, சோதனை முயற்சியாக, 48வது வார்டில் உள்ள 1,500 குடியிருப்புகளில் குறியீடு அட்டை ஒட்டப்பட்டு வருகிறது.

சென்னை புறநகரில், ஐந்து நகராட்சி, ஐந்து பேரூராட்சிகளை இணைத்து, புதிதாக தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியாக உயர்த்தப்பட்டாலும், அடிப்படை பணிகள் என்பது, படுமோசமான நிலையிலேயே உள்ளன.
திருநீர்மலையில், பேரூராட்சியாக இருந்தபோது நடந்த வேலைகளில் பாதி கூட நடக்கவில்லை. பம்மல், அனகாபுத்துார் பகுதிகளிலும் இதே நிலைமை தான்.
பழைய பல்லாவரத்தில், ஒரு சாலை கூட நல்ல நிலையில் இல்லை. லேசான மழை பெய்தாலே, பாதாள சாக்கடை குழாயில் இருந்து கழிவு நீர் வெளியேறி, ஆறாக ஓடுவது வாடிக்கையாகி விட்டது. நீர்நிலைகள் பராமரிப்பை மறந்து விட்டனர்.
பல கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட பூங்காக்கள் சீரழிந்து, மக்கள் வரிப்பணம் வீணானது தான் மிச்சம். அதனால், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பேரூராட்சி பகுதிகளை, மேம்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதிகளில் உள்ள புகார்களை, 1800 425 4355, 84383 53355 ஆகிய இலவச எண்களில், பொதுமக்கள் பதிவு செய்கின்றனர்.
தவிர, தனிப்பட்ட சேவையாக பிறப்பு, இறப்பு சான்று உள்ளிட்ட சான்று பெறவும், கட்டட அனுமதி கேட்டும் பலரும், தாம்பரம் மாநகராட்சியில் விண்ணப்பிக்கின்றனர்.
அதிகாரிகள், உரிய முறையில் பதில் அளிக்காமல் அலட்சியம் செய்கின்றனர். இந்நிலையில், அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் எளிதாக பெறும் வகையில், 'க்யூ.ஆர்., கோடு' என்ற திட்டத்தை, மாநகராட்சி அமல்படுத்தி உள்ளது.
முதல் கட்டமாக, 48வது வார்டில், சோதனை முயற்சியாக இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வார்டில் உள்ள, 2,976 குடியிருப்புகளில், 1,500 குடியிருப்புகளில், 'க்யூ.ஆர்., கோடு' குறியீடு அட்டை ஒட்டப்பட்டு உள்ளது.

இதை பயன்படுத்த தனித்துவமான கருவிகள் எதுவும் தேவைப்படாது. இணையம், கேமரா வசதியுடைய மொபைல் போன் இருந்தாலே போதுமானது.இந்த அட்டையை, ஒவ்வொரு வீட்டு உரிமையாளரும், தங்களுடைய மொபைல் போன் எண்ணுடன் இணைத்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.
பின், ஒவ்வொரு முறையும், மொபைல் போனில் 'ஸ்கேன்' செய்து, சொத்து வரி, குடிநீர் இணைப்பு விபரம் மற்றும் கட்டணம், கட்டட அனுமதி, மாநகராட்சியின் அறிவிப்புகள், காலி மனை வரி, திடக்கழிவு மேலாண்மை வரி விதிப்பு, பாதாள சாக்கடை வரி உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கவும் முடியும்; தங்களுடைய புகார்களையும் இதன் வாயிலாக பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்யப்படும் புகார்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரிடையாக சென்று விடும் என்பதால், அவற்றை உடனுக்குடன் சரி செய்யவும் வாய்ப்பு உள்ளது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களையும் சிரமமின்றி பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். மேலும், தங்களுடைய கருத்துக்களையும் பதிவிடலாம்.
ஆட்டோ பிரசாரம்
'க்யூ.ஆர்., கோடு' முறையில் திட்டம் பெற, சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து அறிய, 48வது வார்டு மக்களுக்கு, மாநகராட்சி நிர்வாகம் மூலம் ஆட்டோவில் பிரசாரம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதனால், வீடுகளுக்கு வரும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, பிரசாரம் செய்யப்படுகிறது.