மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு கார் உள்ளிட்ட தனி வாகனங்களில் சுற்றுலா பயணியர் வருகின்றனர். சுற்றுலா வாகனங்களுக்கு, பேரூராட்சி நிர்வாகம் நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறது.
மாமல்லபுரம் உள்ளூர் திட்டக் குழுமம், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள் பகுதிகளில், இவ்வாகனங்களை நிறுத்த தனியாக 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கிறது.
நகர நுழைவிட பகுதிகளில், இரண்டு கட்டணங்களையும் ஒன்றாக வசூலிக்க, பேரூராட்சி நிர்வாகம், பொது ஏலம் நடத்தி தனியாரிடம் ஓராண்டு உரிமம் வழங்கும்.

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், இந்த ஆண்டு மார்ச் வரை, கட்டணம் வசூலிக்க, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் பொது ஏலம் நடத்தி, 94 லட்சம் ரூபாய்க்கு தனியாருக்கு ஏலம் விடப்பட்டது.
அப்போது, காஞ்சிபுரம் நகராட்சி நிர்வாக மண்டல கூட்டத்தில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேருவிடம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், இக்கட்டணத்தால் சுற்றுலா பயணியர் பாதிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்தார்.
இதையடுத்து, அமைச்சர் நேரு, வாகன கட்டண வசூல் ஏலத்தை தவிர்க்குமாறு, பேரூராட்சி நிர்வாகத்திடம் அறிவுறுத்தினார்.
அதற்கு முந்தைய நாளே, ஏலம் விடப்பட்டதால் சர்ச்சையானது. ஏலதாரருக்கு கட்டண உரிமம் வழங்குவதா அல்லது ஏலத்தையே ரத்து செய்வதா என, அரசின் முடிவை நிர்வாகம் எதிர்பார்த்தது.
அரசின் முடிவு குறித்து, நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 6 வரை, வாகனங்கள் கட்டணம் இன்றி அனுமதிக்கப்பட்டன. பின், ஏலதாரர் நீதிமன்ற உத்தரவு பெற்றதாக, செப்., 7 முதல் கட்டணம் வசூலித்தார்.
கூடுதல் கட்டணம் வசூலிப்பது, நுழைவிடத்தில் மட்டுமின்றி பிற இடங்களிலும் கட்டணம் வசூலிப்பதால், சாலையில் வாகனங்கள் தேங்கி, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. வாகன கட்டண முறையை கைவிடுவது குறித்து, நம் நாளிதழில், கடந்த மாதம் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகமும், இக்கட்டண ஏலம் நடத்தாமல் தவிர்த்த நிலையில், கட்டண வசூல் உரிமம் நேற்று முன்தினம் முடிந்தது. நேற்று முதல் வாகனங்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுகின்றன. இதனால், பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர்.