வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருப்பூர்: திருப்பூருக்கு வடமாநில தொழிலாளர் வருகை அதிகரித்துள்ளது. இதையடுத்து, ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூரில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள், தமிழக தொழிலாளர்களால் தாக்கப்படுகின்றனர் என பரவிய வதந்தியால், பதற்றம் ஏற்பட்டது.
'அதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை; பரப்பப்பட்ட வதந்தி' என்பதை உறுதிசெய்த போலீசார், இத்தகைய விஷமத்தில் ஈடுபட்டவர்களையும் கைது செய்தனர். தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், ஹோலி கொண்டாட சென்ற வடமாநில தொழிலாளர்கள், மீண்டும் திருப்பூர் திரும்ப துவங்கினர். தற்போது வருகை அதிகரித்துள்ளது. திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில், 24 மணி நேரமும், உள்ளூர் மற்றும் உளவுப்பிரிவு போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் மூன்று ஷிப்ட்களாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரயிலில் வரும் வட மாநில தொழிலாளர்கள், எந்த ஊரில் இருந்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்தி கணக்கெடுக்கின்றனர்.
போலீசார் கூறுகையில், 'பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் குடும்பத்தோடு திருப்பூர் திரும்ப துவங்கியுள்ளனர். தினமும், 600 முதல், 1,000 தொழிலாளர்கள் வரை வருகின்றனர்' என்றனர்.