வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை மாநகராட்சி, மாநகர போக்குவரத்து கழகம், சென்னை காவல் துறை இணைந்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை 'கும்டா'வை, 645 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 'ஏ.ஐ.,' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போக்குவரத்து மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

சென்னை போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை, நகர பேருந்து மேலாண்மை என இரண்டு பிரிவுகளாக, இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, சென்னையில் உள்ள சிக்னல் கம்பங்கள், போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப, போக்குவரத்து போலீசாரால் இயக்கப்பட்டு வருகிறது.
நாள் முழுதும் போக்குவரத்தை சீர் செய்யும் காவலர்களுக்கு, சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதும் சவாலான பணியாக உள்ளது. இதனால், போலீசார் இல்லாத நேரங்களில், சாலை விதிகளை மீறுவதால், விபத்துகள், போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காண, சென்னை போக்குவரத்து தகவல் மேலாண்மை பிரிவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் வகையில், 165 சந்திப்புகளில் சிக்னல்கள் அமைக்கப்பட உள்ளன.
அதிக வாகன நெரிசல், குறைவான வாகன நெரிசலை அடையாளம் கண்டு, அதற்கேற்ப வழிவிடும் வகையில் இந்த சிக்னல்கள் இயங்கும்.ஆம்புலன்ஸ், வி.ஐ.பி., வாகனங்கள் வரும்போது, சிக்னல்கள் தானாகவே வழிவிடும் வகையில் பச்சை நிறத்தில் மாறும்.
இதனால், ஒவ்வொரு சிக்னலிலும், நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். இதற்காக, 165 போக்குவரத்து சந்திப்புகளில், சாலை கட்டமைப்புகளும் மாற்றியமைக்கபட உள்ளது.
இதில், 50 சந்திப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. 10 இடங்களில் வாகன வேகத்தை பதிவு செய்யும் கருவியும் பொருத்தப்பட உள்ளது.

இதன் வாயிலாக, சாலை விதிகளை மீறுவோரும், புதிய தொழில்நுட்பம் வாயிலாக கண்காணித்து, இணையவழியில் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும். இவற்றை ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணிக்கும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.
விபத்து, வாகன நெரிசல் அதிகமானால் அது குறித்த தகவல் கட்டுப்பட்டு அறைக்கு தெரியவரும். அதற்கேற்ப, போக்குவரத்து மாற்றி விடப்படும்.
மேலும், 17 இடங்களில் பெரிய அளவிலான 'டிஜிட்டல் போர்டு'கள் அமைக்கப்பட உள்ளன. இதில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் குறைவாக உள்ள மாற்று பாதை, எந்த இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் செல்லமுடியும் உள்ளிட்ட தகவலை வாகன ஒட்டிகள் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், நகர பேருந்து மேலாண்மை பிரிவின் வாயிலாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் 2,940 பேருந்துகளில் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட உள்ளது. 71 பேருந்து நிலையங்களிலும், 532 பேருந்து நிறுத்தத்திலும் பயணியர் விபர பலகை, டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட உள்ளது.
இதில், எந்த பேருந்து எந்த வழித்தடத்தில் செல்கிறது என்பதை பயணியர் தெரிந்து கொள்ள முடியும். பேருந்து நிறுத்தங்களில் ரயில் நிலையங்களில் அறிவிக்கப்படுவது போல, அடுத்து வரும் பேருந்தின் விபரம், எதிர்பார்கும் பேருந்து எங்கு வந்து கொண்டிருக்கிறது உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும்.
இத்தகவலை மொபைல் போன் செயலி வாயிலாக அறிந்துகொள்ளவும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை 31 மாதங்களில் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.