''தொழில் அதிபர்கள் கிராமத்தை தத்தெடுத்து உதவ வேண்டும்'' என 'சோஹோ' நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேண்டுகோள் விடுத்தார்.
'ராக்' அமைப்பு, கோவை வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்கள் மற்றும் சி.ஆர்.எஸ்., நினைவு அறக்கட்டளை இணைந்து 'இன்ஸ்டிடியூசன் பில்டர் சி.ஆர்.எஸ்' விருது வழங்கும் விழா, மணி மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று நடந்தது.
சி.ஆர்.எஸ்., விருதை 'சோஹோ கார்ப்பரேசன்' முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு பெற்றுக்கொண்டு பேசியதாவது:
சி.ஆர்.சுவாமிநாதன் பெரிய சாதனையாளர். கோவை, தொழில் துறைக்கு ஏற்ற மிகப்பெரிய இடம். கொங்கு மண்டலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது.
பிற நகரங்களை ஒப்பிடும்போது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கோவையின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கு, ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்யுங்கள்.
தமிழகத்தில், தென்காசி, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய குக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான மக்களுக்கு வேலை இல்லை. குடும்ப சூழல் காரணமாக அதிக வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். சம்பாதிக்கும் பணத்தில் வட்டி கட்டியே வாழ்க்கையை இழக்கின்றனர்.
பல கிராமங்களில் ஆண்கள் மதுவுக்கு அடிமையாவதால், இளம் வயதிலேயே பல பெண்கள் விதவையாகும் நிலை ஏற்படுகிறது.
தொழில் அதிபர்கள், வசதி படைத்தவர்கள், அது போன்று பாதிக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவி செய்யுங்கள்.
இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு பேசினார்.
நிகழ்ச்சியில், ஏழை மற்றும் பெற்றோரை இழந்த, வறுமையில் வாடும் ஐந்து மாணவர்களுக்கு எட்டாம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் முடிக்கும் வரை கல்வி உதவி தொகை வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.
விழாவில், பிரிகால் லிமிடெட் நிறுவனர் விஜய்மோகன், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், 'ராக்' நிறுவனர் சவுந்தரராஜன், அறக்கட்டளை தலைவர் பாலசுந்தரம் மற்றும் தொழில் அமைப்பினர் பங்கேற்றனர்.