விழுப்புரம்: அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார்.
விழுப்புரத்தில் தொண்டர்கள் மத்தியில் பழனிசாமி பேசியதாவது:
அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. நான் தொண்டர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும். அதிமுகவுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்.
ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியில் தொடர்ந்து எப்போதும் இருக்கும். அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது. ஜனநாயக மாண்புகளை காத்து நிற்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்பது மகிழ்ச்சி. எனது உழைப்பை, நேர்மையை அங்கீகரித்து வழங்கப்பட்ட பொறுப்பு மக்களாட்சித் தத்துவத்திற்கான அங்கீகாரம்.

அதிமுக வெற்றிப்பயணம் தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்ற தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. கட்சியை சிறப்பாக வழி நடத்தி மீண்டும் அதிமுக ஆட்சியை மலரச் செய்ய அயராது பணியாற்றுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.