வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நாளை(ஏப்.,3) மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'மோடி' எனும் ஜாதியினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் உடனடியாக ஜாமின் வழங்கியதுடன், மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு அடுத்த நாள் ராகுல், தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் சட்ட வல்லுநர்கள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல், நாளை செசன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மனுவில், நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை அந்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனக் கோரியுள்ளதாக தெரிகிறது.