சென்னை: அ.தி.மு.க., உடனான கூட்டணி இறுதி, உறுதி என தற்போது எதுவும் கூற முடியாது தற்போதைய சூழலில் மாற்றத்தை எதிர்நோக்கி தமிழக மக்கள் காத்திருக்கின்றனர். அதற்காக ஒரு மாநில தலைவராக என்னுடைய பங்களிப்பை அளிப்பதில் நான் தீர்க்கமாக இருக்கிறேன் . என பா.ஜ., மாநில தலைவர கூறினார்.
நிருபர்களிடம் அண்ணாமலை இன்று கூறியதாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு சாதாரணமானது. அரசியல் குறித்து பேசவில்லை. அ.தி.மு.க., உடன் கூட்டணி இறுதி, உறுதி என எதுவும் கூற முடியாது. தற்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இல்லை என நான் கூறியது இல்லை. எதுவுமே கல்லில் எழுதப்பட்ட வாக்கியங்கள் அல்ல. கூட்டணி குறித்து தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்க முடியாது. தேர்தலுக்கு 9 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே தேர்தல் குறித்து முதலுரையும், முடிவுரையும் எழுத முடியாது. தனிப்பட்ட கருத்து இருந்தாலும் தேசிய தலைமை முடிவுக்கு கட்டுப்பட வேண்டும். கூட்டணி குறித்து தேசிய தலைவர்கள் என்ன கூறுகிறார்களோ அதனை செய்வோம்.
ஏப்., 14ல் தி.மு.க.,வின் ஊழல் பட்டியல்

அமித்ஷாவை சந்தித்த போது 2024 மற்றும் 2026 தேர்தல் குறித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினேன். கூட்டணி குறித்து அமித்ஷா கூறியதை புரிந்து கொள்ள ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ஜ., உள்ளதா என்ற கேள்விக்கு ஆம் என பதிலளித்தார். பா.ஜ., கூட்டணியை அமித்ஷா இன்னும் இறுதி செய்யவில்லை. மாநில தலைவராக தொண்டர்களின் விருப்பத்தை அமித்ஷாவுடன் கூறியுள்ளேன். 25 தொகுதிகளில் பாஜ., வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் தயாராக இருக்க வேண்டும். தற்போது தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து பேசுவது சரியல்ல. 20 ஆண்டுக்கு பின் பாஜ., வளர்ச்சியை நினைத்தால், இப்போது செல்லும் பாதை சரியாக இருக்காது.
தனித்து போட்டி என பொதுவெளியில் பேசியது கிடையாது. எந்த கட்சியின் மீதும் எப்போதும் பா.ஜ.,வுக்கு கோபம் இருந்தது இல்லை. ஏப்., 14ல் தி.மு.க.,வினரின் ஊழல் பட்டியல் மற்றும் ரபேல் கடிகாரத்திற்கான பில் வெளியிடப்படும். பா.ஜ., தனிமனிதருடன் கூட்டணி வைத்தது இல்லை. கட்சியுடன் தான் கூட்டணி வைக்கிறோம்.
என்னை நானே கேள்வி கேட்கிறேன்
லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால், தூய்மையான அரசியலை பார்ப்பீர்கள். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் நான் உறுதியாக உள்ளேன். பின்னடைவு ஏற்பட்டாலும் பின்வாங்க மாட்டேன். அது குறித்து கவலையில்லை. பணம் கொடுத்து வெற்றி பெறுவதில் எந்த பயனும் இல்லை என நினைக்கிறேன். நீண்ட கால நோக்கத்திற்காக நான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியல் என்பது சாதாரணமானது அல்ல. அது கடினமானது. 2 ஆண்டுகள் தலைவராக இருந்த நிலையில் என்னை நானே கேள்வி கேட்கிறேன். கட்சிக்கும், கட்சி வளர்ச்சிக்கும் என்ன செய்துள்ளேன் என கேள்வி கேட்கிறேன். கட்சியை வலிமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பயணித்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.