வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருவதாக பிரதமர் மோடி பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ளார். 'ரோஜ்கார்' என்று அழைக்கப்படுகிற இந்த திட்டத்தை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அப்போது 75 ஆயிரம் பேருக்கு மத்திய அரசு வேலைக்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று (ஏப்.,13) 71 ஆயிரம் பேருக்கு மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையை பிரதமர் மோடி வழங்கினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70,000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசு வேலை பெற்றுள்ளனர், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் அரசு வேலைகள் வழங்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மத்திய பிரதேசத்தில் நேற்று 22,000 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. புதிய இந்தியாவின் இளைஞர்கள் புதுமையான தொழில்நுட்பங்களில் ஈடுபட்டு ட்ரோன் தயாரிப்பில் அதிகளவில் ஈடுபட்டு ட்ரோன் பைலட்களாக மாறுகிறார்கள். உள்கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு செய்வது வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.