குவஹாத்தி,-“வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக திறக்கப்பட்டுள்ள 'எய்ம்ஸ்' மருத்துவமனை வாயிலாக, அங்கு சுகாதார கட்டமைப்புகள் மேலும் வலிமை பெறும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் குவஹாத்தியில், 1,123 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவக் கழக மருத்துவமனையை நேற்று திறந்து வைத்தார்.
பின், நல்பாரி, கோக்ரஜார், நாகோன் மாவட்டங்களில் அமைந்துள்ள புதிய மருத்துவக் கல்லுாரிகளை 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:
மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், கடந்த ஒன்பது ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களின் உட்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.
இங்கு அசாமில் திறந்து வைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, புதிய மருத்துவக் கல்லுாரிகள் ஆகியவற்றால், வடகிழக்கு மாநிலங்களின் சுகாதார கட்டமைப்பு மேலும் வலிமையாகிறது. அதிகார வேட்கை உள்ளவர்கள், முன்பு நாட்டை ஆள்வதை மட்டுமே நோக்கமாக வைத்து மக்களுக்கு தீங்கு செய்துவிட்டனர்.
நாங்கள் உங்களின் பணியாளர்கள் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அதனால் தான் வடகிழக்கு மாநிலங்கள் எங்களுக்கு வெகு துாரமாக தெரியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
அசாமில், ௫ லட்சம் ரூபாய் வரை பணமில்லா மருத்துவச் சிகிச்சைப் பலன்களைப் பெறக்கூடிய ஒரு கோடி பயனாளி களுக்கு, ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கும் திட்டத்தையும் பிரதமர் துவக்கி வைத்தார்.