தார்வாட்: முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை பா.ஜ., மேலிட தலைவர்கள் சமாதான பேச்சு தோல்வியில் முடிந்தது. பா.ஜ.,விலிருந்து விலகுவதாகவும், இன்று தன் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பள்ளி - தார்வாட் மத்திய தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் ஆறு முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர், சபாநாயகர், முதல்வர் உட்பட பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். இம்முறையும் தனக்கு சட்டசபை தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்தார்.
ஆனால், கட்சி மேலிட தலைவர்கள் அவரை தொடர்பு கொண்டு, புதியவர்களுக்கு விட்டு கொடுக்கும்படி கேட்டு கொண்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்து, தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து சீட் கொடுத்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தார்.
இரண்டாம் கட்ட பட்டியலிலும் அவர் தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்தார். தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என்றார்.
இந்நிலையில், பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, நேற்றிரவு 9:30 மணிக்கு அவரது தார்வாட் வீட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தினர். 11:00 மணி வரை கூட்டம் நடந்தது.
இதன் பின், ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது:
வட மாவட்டங்களில் முதல் பா.ஜ., - எம்.எல்.ஏ., நான் தான். ஜன சங்கம் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்து உள்ளேன். எதேச்சையாக அரசியலுக்கு வந்தவன்.
தற்போது மூத்த தலைவர்கள் பலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. என் ஆதரவாளர்கள் நள்ளிரவு ஆனாலும் என் மீது அன்பு காட்டுகின்றனர். இதற்கு நான் மதிப்பு தரவில்லை என்றால் எப்படி. என் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லை. எந்த 'சிடி'யும் இல்லை. எடியூரப்பாவுக்கு பின் நான் தான் மூத்த தலைவர்.
எனக்கு வேறு வாய்ப்பு தரப்படும். நாட்டில் ஏதாவது ஒரு உயர் பதவி தருவதாக தர்மேந்திர பிரதான் கூறினார். ஆனால், கடைசியாக எம்.எல்.ஏ., பதவி வகிக்க வேண்டும். அது மட்டுமே போதும் என்றேன். ஒரே ஒரு அவகாசம் தாருங்கள், இனி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றேன்.
எனவே நாங்கள் மேலிட தலைவர்களிடம் பேசிவிட்டு வருவதாக சென்றுள்ளனர். எனவே நாளை (இன்று) சபாநாயகரை சந்தித்து எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். பா.ஜ.,விலிருந்து விலகுவேன். இதன் பின், ஒவ்வொரு நாளும், பல முக்கிய விஷயங்களை அவிழ்த்து விடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.