வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி மதுபானக் கொள்கை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ., முன் இன்று நேரில் ஆஜராக உள்ளார்.
புதுடில்லியில் அமல்படுத்தப்பட்டு பின் விலக்கிக் கொள்ளப்பட்ட புதிய மதுபானக் கொள்கையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக பா.ஜ., குற்றம் சாட்டியது. இது குறித்து துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா அளித்த பரிந்துரைப்படி வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள் துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைக்காக புதுடில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில் இன்று காலை 11:00 மணிக்கு ஆஜராகும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்மன் அனுப்பினர். இதன்படி இன்று சி.பி.ஐ., அலுவலகத்தில் அவர் ஆஜராக உள்ளார்.
இது குறித்து நேற்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:
![]()
|
விசாரணைக்காக நிச்சயம், சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராவேன்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
அரவிந்த் கெஜ்ரிவால் என்பவர் ஊழல்வாதி என்பது நிரூபணமானால் இந்த உலகிலேயே நேர்மையானவர்கள் என எவரும் இருந்து விட முடியாது. என்னை கைது செய்யும்படி பா.ஜ., உத்தரவிட்டால் அதை நிறைவேற்ற சி.பி.ஐ., அதிகாரிகள் நிச்சயம் அதைச் செய்வர்.
இந்த வழக்கில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. அதற்காக, சி.பி.ஐ.,க்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்.
ஊழலுக்கு எதிராக, சட்டசபையில் என்றைக்கு நான் பேசினேனோ அன்றைக்கே நான் குறிவைக்கப்பட்டு விட்டேன். எந்த ஆதாரமும் இல்லாமல் பிரதமர் மோடிக்கு, 1,000 கோடி ரூபாய் தந்தேன் என நான் கூறினால் பிரதமரை கைது செய்வீர்களா
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே புதிய மதுபானக் கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் குறித்து விவாதிக்க, நாளை சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு, புதுடில்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
- - நமது டில்லி நிருபர் -