வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: ''கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் குடும்ப தலைவியருக்கு மாதம் 2000 ரூபாய் உதவித் தொகை அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும்,'' என காங்., முன்னாள் எம்.பி., ராகுல் தெரிவித்தார்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 10ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பு வெளியான பின் காங்., - முன்னாள் எம்.பி., ராகுல் முதல்முறையாக கர்நாடகாவுக்கு நேற்று வந்தார்.
கோலாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்டில் அதானி விவகாரத்தை நான் எழுப்பக்கூடாது என்பதற்காக பார்லிமென்ட் செயல்பட விடாமல் பா.ஜ., தடுத்தது. வழக்கமாக எதிர்கட்சியினர் தான் பார்லிமென்ட் கூட்டத்தை நடத்தவிடாமல் இடையூறு செய்வர். இந்தமுறை அதை பா.ஜ.,வினரே செய்தனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் 'கிருஹ ஜோதி' திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 'கிருஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் குடும்ப தலைவியர் அனைவருக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
'அன்ன பாக்யா' திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் மாதம் தலா 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாயும் பட்டயப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவி தொகையும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
காங்கிரஸ் வெற்றி பெற்ற பின் நடக்கும் முதல் அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்த திட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வரும். இவ்வாறு அவர் பேசினார்.