வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நான்கு நாட்கள் அவகாசத்தில், தமிழகம் முழுதும் ஒரே நாளில் 45 இடங்களில், ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்தியிருப்பதும், அதில் 35 ஆயிரத்திற்கு அதிகமானோர் சீருடையுடன் பங்கேற்றதும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 2022 அக்., 2-ல், தமிழகம் முழுதும் 51 இடங்களில் சீருடை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அனுமதி கோரியது.
அதற்கு காவல் துறை அனுமதி மறுக்கவே, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடத்த தடை இல்லை என, 11-ம் தேதி உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து நான்கு நாட்கள் இடைவெளியில், நேற்று முன்தினம் ஒரே நாளில், 45 இடங்களில் சீருடை அணிவகுப்பு நடந்தது.
இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றதாகஆர்.எஸ்.எஸ்., தெரிவித்துள்ளது.
![]()
|
சென்னை கொரட்டூரில் நடந்த அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ்., தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலத் தலைவர் வன்னியராஜன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர், சீருடையுடன் பங்கேற்றனர்.
அப்போது பேசிய வன்னியராஜன், 'ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்காக நாங்கள் எந்த விளம்பரமும் செய்யவில்லை. அப்படி செய்யும் வழக்கமும் இல்லை. ஆனால், தி.மு.க., அரசு தடை விதித்ததன் வாயிலாக, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சேர்ந்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி' என்றார்.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகிகள் கூறியதாவது:
ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு என்பது வழக்கமாக, அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்தும் பேரணி, ஊர்வலம் போன்றது அல்ல. பழுப்பு நிற பேன்ட், வெள்ளை முழுக்கை சட்டை, கருப்பு நிற தொப்பி, கருப்பு 'ஷூ, பெல்ட்' என, சீருடைக்காக, ஒருவர் குறைந்தது 2,000 ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின் கிடைத்த நான்கு நாட்கள் அவகாசத்தில், அனைத்து இடங்களில் வெற்றிகரமாக அணிவகுப்பு நடந்துள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமானோர் அணிவகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்றனர். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., கட்டமைப்பு வலுவாக இருப்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
'தமிழகத்தில் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்.,சை காலுான்ற விட மாட்டோம்' என, தி.மு.க.,வும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளும் நீண்ட காலமாக பேசி வருகின்றன.
தற்போது, தமிழகத்தில் மிக அமைதியாக ஆர்.எஸ்.எஸ்., வளர்வதாக, தி.மு.க., கூட்டணியை சேர்ந்தவர்கள் சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர்.