வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு:கர்நாடகா சட்டசபைத் தேர்தலில் 86 தொகுதிகளின் பொறுப்பு தமிழக பா.ஜ., தலைவரும்; கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்தொகுதிகளில் வசிக்கும் தமிழர்களின் ஓட்டுகளை வளைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
![]()
|
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு மே 10ம் தேதி நடக்கிறது. மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தற்போது நடக்கும் பா.ஜ., ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, பா.ஜ., தரப்பில் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் பொறுப்பாளராகவும்; மன்சுக் மாண்டவியா, தமிழக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இணை பொறுப்பாளராகவும் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர்.
மூவரும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசு திட்டங்களை விளக்கி வருகின்றனர். பிரச்னை ஏற்படும் பகுதிகளுக்கு நேரில் சென்று, உள்ளூர் தலைவர்களுடன் ஆலோசித்து தீர்த்து வைக்கின்றனர்.
10 மாவட்டங்கள்
இவர்கள், வேட்பாளர்கள் தேர்விலும் முக்கிய பங்கு வகித்தனர். தேவைப்படும் தொகுதிகளில் பிரசாரம் செய்கின்றனர். முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று பா.ஜ.,வை ஆதரிக்கும்படி வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், மொத்தம் உள்ள 224 தொகுதிகள், மூன்று பொறுப்பாளர்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. இதில், தர்மேந்திர பிரதானுக்கு 100 தொகுதிகள்; அண்ணாமலைக்கு 86 தொகுதிகள், மன்சுக் மாண்டவியாவுக்கு 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு 28, உத்தர கன்னடா 6, தாவணகெரே 7, ஷிவமொகா 7, உடுப்பி 5, சிக்கமகளூரு 5, கோலார் 6, மாண்டியா 7, ஹாசன் 7, தட்சிண கன்னடா 8 ஆகிய 10 மாவட்டங்களின் 86 தொகுதிகள் அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதில், 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழர்கள் தான் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பவர்களாக உள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஆங்காங்கே பரவலாக உள்ளனர்.
![]()
|
பெங்களூரில் முகாம்
மேலும், அவர் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றிய உடுப்பி, சிக்கமகளூரு, பெங்களூரு மாவட்டங்களில் அண்ணாமலைக்கு நல்ல பெயர் உள்ளது. கடலோர மாவட்டங்களான உத்தர கன்னடா, தட்சிண கன்னடாவில் அவர் பேச்சை கேட்பதற்காகவே மக்கள் காத்திருக்கின்றனர்.
இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பா.ஜ., திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். பெங்களூரு மாவட்ட தொகுதிகளில் எங்கெங்கு பிரசாரம் செய்ய வேண்டும் என்பதை, கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக கர்நாடகாவில் முகாமிட்டுள்ள அண்ணாமலை, பெங்களூரு, ஷிவமொகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழர் பகுதிகளில் தமிழிலேயே பேசி, மத்திய, மாநில பா.ஜ., அரசு திட்டங்கள் குறித்து விளக்க உள்ளார்.
* தேசிய அளவில் புகழ்
அப்போது தமிழர் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்ட தீர்மானித்துள்ளார். இதன் வாயிலாக தமிழர் ஓட்டுகளை அள்ளுவது பா.ஜ.,வின் நோக்கம். சட்டசபை தேர்தலில் அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் பட்சத்தில், தேசிய அளவில் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
இதற்காக, பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, செயல்பட்டு வருகிறார்.