வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: 'கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022 அக்., 23ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஐ.இ.டி., எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டது' என, என்.ஐ.ஏ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதி முன், அக்., 23ல் நடந்த கார் குண்டு வெடிப்பில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபீன் பலியானார். தீபாவளிக்கு முதல் நாள் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக, முபீன் உறவினர்கள் உட்பட, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ., தனிப்படையினர், சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தீய கொள்கைகளால் ஜமேஷா முபீன் ஈர்க்கப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர், ஐ.எஸ்., அமைப்பின் தலைவரான அல் குரேஷிக்கு விசுவாசமாக இருப்பதாக உறுதி ஏற்றுக் கொண்டவர்.
கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன் என்பவரிடம் இருந்து ஒரு, 'பென் டிரைவ்' கைப்பற்றப்பட்டது. அதில், ஜமேஷா முபீன், தன்னை ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என, அடையாளப்படுத்திக் கொள்ளும் வீடியோ காட்சி இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவதில் தனக்கு இருக்கும் ஆர்வத்தை பற்றி, விலாவாரியாக ஜமேஷா முபீன் பேசியுள்ளார்.

இலங்கையில், ஈஸ்டர் தின குண்டு வெடிப்பை நிகழ்த்தி, 260 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாதி ஹாஷிம் பேச்சுக்களால், முபீன் உந்துதல் பெற்று, அதேபோல் ஒரு பெரிய தாக்குதலை இங்கு நடத்த திட்டமிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு ஆவணங்கள், குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன. அதில், தற்போதைய ஜனநாயக நடைமுறைகளை குறை கூறும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஜனநாயக நடைமுறைகள், குறிப்பிட்ட மத சட்டங்களுக்கு ஏற்புடையவை அல்ல என, அந்த கையெழுத்து பிரதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய இலக்குகள்
மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஏற்ற இலக்குகளும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. அரசு அலுவலக கட்டடங்கள், மாவட்ட கோர்ட், பூங்கா, ரயில் நிலையம் போன்ற மக்கள் கூடும் இடங்கள், ஒரு சில கோவில்கள் ஆகியவையும் ஜமேஷா முபீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட கையெழுத்து பிரதிகளில் இலக்குகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
ஜமேஷா முபீன் திட்டம், செயல்பாடுகள் அனைத்தும், ஐ.எஸ்., அமைப்பின், 'ஆன்லைன்' பத்திரிகையான, 'வாய்ஸ் ஆப் கொரோசான்' என்ற இதழில் வெளியான கட்டுரையில் இடம் பெற்றுள்ளன. மேலும், கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்புக்கு ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்ற தகவலும் அந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.
தங்கள் மதத்தின் கவுரவத்தை உயர்த்திப் பிடிக்கவும், பழி வாங்கவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது ஒரு தொடக்கம் தான் என்றும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு தயாரிப்பு
கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், காரில் ஐ.இ.டி., எனப்படும் அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. முகமது அசாருதீன், முகமது தல்கா, பிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ், அப்சர் கான் ஆகியோர் முபீனுக்கு வெடிபொருட்களை கொண்டு செல்ல உதவியுள்ளனர்.
குண்டு வெடிப்பு நிகழ்த்த பயன்படுத்திய காரை, தல்கா வழங்கியுள்ளார். பிரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர், வெடிபொருட்களை காரில் ஏற்றியுள்ளனர்.
முபீன் உறவினர்களான அசாருதீன், அப்சர் ஆகியோர், வெடிமருந்து பொருட்களை தனித்தனியாக கொள்முதல் செய்து, ஒன்றோடு ஒன்று கலந்து, 'பேக்கிங்' செய்து வெடிகுண்டு தயாரிக்க உதவியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அசாருதீன், தல்கா, பிரோஸ், முகமது ரியாஸ், நவாஸ், அப்சர் கான் ஆகியோர் மீது வெவ்வேறு சட்டப்பிரிவுகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, என்.ஐ.ஏ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.