ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் "ரெய்டு' | ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் "ரெய்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் நண்பர் வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் "ரெய்டு'

Added : அக் 12, 2011

சென்னை : தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நண்பர் இனிகோ இருதயராஜ் வீடு மற்றும் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர்,"ரெய்டு' நடத்தினர். சென்னை, நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் இனிகோ இருதயராஜ். இவர், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கிறார். தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான இவர், சமீபகாலமாக, முன்னாள் அமைச்சர் அன்பரசனுடன் நிகழ்ச்சிகளில் அடிக்கடி காணப்பட்டார். ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமசை ஒட்டி, அப்போதைய முதல்வர் கருணாநிதியை வைத்து பெரிய விழா ஒன்றையும் நடத்தினார்.

சமீபத்தில், முன்னாள் அமைச்சர் அன்பரசன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டனர். அப்போது, இனிகோ இருதயராஜ் தொடர்பான சில ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று காலை திடீரென நீலாங்கரையில் உள்ள இனிகோ இருதயராஜ் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில் போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையின் போது, தேர்தலுக்கு முன் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவிற்கான நிதி எங்கிருந்து வந்தது, யாரிடம் இருந்து பெறப்பட்டது, தி.மு.க.,வில் யாராவது இதற்கு பணம் கொடுத்தார்களா? என்ற கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கான ஆவணங்கள் பெற்றதாக கூறப்படுகிறது.

அங்கு சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றிய பின், தொடர்ந்து நந்தம்பாக்கம், டிபென்ஸ் காலனியில் உள்ள இருதயராஜின், ஏற்றுமதி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நுழைந்தனர். அங்கு, நேற்று மாலை வரை சோதனை நீடித்தது. சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையின் காரணமாக, தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X