வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லி மேயர் தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் விலகியதால், அந்த பதவியை ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய் மீண்டும் கைப்பற்றினார்.
டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கு ஒவ்வொரு நிதியாண்டுக்கும் தேர்தல் நடத்தப்படும். 250 கவுன்சிலர்கள், 14 எம்.எல்.ஏ.,க்கள், 10 எம்.பி.,க்கள் ஓட்டுப்போட்டு மேயரை தேர்வு செய்வது வழக்கம். இந்த நிதியாண்டிற்கான மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் இன்று (ஏப்.,26) நடந்தது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முகேஷ் கோயல், தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த தற்போதைய மேயர் ஷெல்லி ஓபராய் மற்றும் தற்போதைய துணை மேயர் முகமது இக்பால் ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிட்டனர். பா.ஜ., சார்பில், கவுன்சிலர் ஷிகா ராய் மேயர் பதவிக்கும், சோனி பாண்டே துணை மேயர் பதவிக்கும் களமிறக்கப்பட்டனர். தேர்தல் நடக்கவிருந்த சில நிமிடங்களுக்கு முன்னர்,பா.ஜ., வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர்.

இதனையடுத்து, மேயராக ஷெல்லி ஓபராயும், துணை மேயராக முகமது இக்பாலும் மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆம் ஆத்மியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.