உடுமலை;குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம், குழந்தை தொழிலாளர் மற்றும் முறைப்படுத்துதல் திருத்த சட்டப்படி, 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வித தொழிலும் அமர்த்துவது குற்றமாகும்.
14 முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினரை, அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்.
இந்நிலையில், தொழிலாளர் துறை அதிகாரிகள் அடங்கிய குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் தடுப்பு படையினர், வருவாய்த்துறை அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 'சைல்டு லைன்', தொழிலாளர் துறை அலுவலர்கள் இணைந்து கூட்டாய்வு நடத்தினர்.
தொழிலாளர் துறை உதவி கமிஷனர் செந்தில்குமரன் கூறியதாவது: மாவட்டத்தில், 30 இடங்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. மோட்டார் பழுது பார்க்கும் மூன்று நிறுவனங்கள் மீது, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் சட்டம், குழந்தை தொழிலாளர் திருத்த சட்டப்படி, பணியாற்றி மூன்று வளரிளம் பருவ தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர்.
வளரிளம் பருவ தொழிலாளர்களை பணியில் அமர்த்திய உரிமையாளர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.