திருப்பூர்:மூச்சுவிடுவதில் சிரமம்...இந்த பிரச்னை பரவலாக அதிகரித்து வருவதை உணர முடியும்.
'சுவாசப் பிரச்னை என்பது, ஆஸ்துமா நோயை உருவாக்கிவிடும். குளிர்காலத்தை விட கோடையில் தான், ஆஸ்துமா பிரச்னை அதிகம் ஏற்படும்' என்கின்றனர் மருத்துவர்கள்.
காற்று மாசுபாடு, பராமரிப்பில்லாத மின் விசிறி, குளிர்சாதன பயன்பாடு, மாசு நிறைந்த சுற்றுச்சூழல், சீரற்ற உறக்கம், புகை பழக்கம் போன்ற பல காரணங்களால் ஆஸ்துமா ஏற்படுகிறது என்கின்றனர், மருத்துவர்கள். மூச்சுவிட சிரமம், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் மார்பு இறுக்கம் போன்ற பிரச்னைகள் ஆஸ்துமாவுக்கான அறிகுறிகள்.
ஆஸ்மா நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆண்டுதோறும் மே மாதம் முதல் செவ்வாய் அன்று, உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.நடப்பாண்டு, 'அனைவருக்குமான ஆஸ்துமா பராமரிப்பு' என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் தகவல் படி, 26.2 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்னர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆஸ்துமா பரிசோதனை முகாம் நடத்துவது; கிராமப்புறங்களில் நோய் கண்டறிதல், பள்ளிக்குழந்தைகள் மத்தியில் ஆஸ்துமா நோய் தவிர்ப்பு விழிப்புணர்வு வழங்குவது போன்ற பணிகள் முடுக்கவிடப்பட வேண்டும்.
மாசு இல்லாத காற்று சுவாசிப்பது, அதிகளவிலான குளிர் காற்றில் இருப்பது, புகைப்பழக்கம் தவிர்ப்பது, புகை ஒவ்வாமை இருப்பவர்கள் துாபம், பட்டாசு போன்றவற்றின் புகையை தவிர்ப்பது, சளி அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடம் இருந்து விலகி இருப்பது, ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான மருந்தை சரியான முறையில் உட்கொள்ளுதல் போன்வற்றின் மூலம், ஆஸ்துமாவில் இருந்து தப்ப முடியும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- இன்று, உலக ஆஸ்துமா தினம் -