சின்னமனூர், : மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வேகமாக பரவி வரும் காசநோயை கட்டுப்படுத்த எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் நடத்தும் பணிகளில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காசநோய் என்பது ஒரு காலத்தில் குணப்படுத்த முடியாத நோயாக இருந்தது.
காசநோய் ஒழிப்பு திட்டம் என்ற பெயரில் சர்வதேச அளவில் ஆரம்பித்து அனைத்து நாடுகளிலும் தீவிர நடவடிக்கைகள் எடுத்ததன் விளைவாக காசநோய் கட்டுக்குள் வந்தது.
2025க்குள் காசநோய் இல்லா உலகம் படைப்போம் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் கிராமங்களில் காசநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
அதை தொடர்ந்து கிராமங்களில் மொபைல் வேன் மூலம் எக்ஸ்ரே எடுத்தல், சளிப் பரிசோதனை செய்தல் போன்றவைகள் செய்து காசநோய் பாதிப்பை கண்டுபிடித்து வருகின்றனர்.
சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வட்டாரங்களில் காசநோய் தடுப்பு பிரிவினர், கிராம சுகாதார நர்ஸ்கள் மூலம் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து ஓடைப்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மணிகண்டன் கூறுகையில், ''காசநோய் அதிகரிக்கவில்லை.
ஏற்கெனவே இருந்தது தான். வெளியில் தெரியாமல் இருந்தது.
தற்போது எக்ஸ்ரே, சளி பரிசோதனைகள் செய்வது அதிகரித்துள்ளதால் அதிகமாக இருப்பது போன்று உள்ளது.
சளி இல்லாமல் வெறும் உமிழ்நீரில் கூட காசநோய் பரிசோதனை பண்ணும் வசதிகள் உள்ளன. எனவே பொது மக்கள் பயப்படத் தேவையில்லை.'', என்றார்.