திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம், வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை பெருவிழாவில், வேதகிரீஸ்வரர் உள்ளிட்ட சுவாமியர், நேற்று திருத்தேர்களில் கோலாகல வீதியுலா சென்றனர்.
திருக்கழுக்குன்றத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது.
இக்கோவிலின் முக்கிய உற்சவமான சித்திரை பெருவிழா, 10 நாட்கள் நடைபெறும். இவ்விழா, ஏப்ரல் 25ம் தேதி துவங்கி, சுவாமியருக்கு தினமும் காலை, இரவு என, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வீதியுலா செல்கின்றனர்.
ஏப்ரல் 27ம் தேதி நடந்த மூன்றாம் நாள் உற்சவத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்கள், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமியருடன், கிரிவலம் சென்றனர்.
ஏழாம் நாள் உற்சவமாக, நேற்று, சுவாமியர் தனித்தனி திருத்தேரில் கோலாகலமாக வீதியுலா சென்றனர். பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், வேதகிரீஸ்வரர், திரிபுரசுந்தரி, விநாயகர், முருகர் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு, சிறப்பு அபிஷேக வழிபாடு நடத்தி, அலங்கரிக்கப்பட்டு, 5:00 மணிக்கு அவரவர் தேரில் எழுந்தருளி, வழிபாடு நடந்தது.
தொடர்ந்து, முதலாவதாக, 5:30 மணிக்கு விநாயகர்; 5:55 மணிக்கு வேதகிரீஸ்வரர்; அடுத்து அம்பாள், பிற சுவாமியர் என புறப்பட்டனர். பக்தர்கள் ஓம் நமசிவாய முழக்கத்துடன் தேர்களை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
மங்கல இசை முழங்கி, மேட்டுத் தெரு, கருங்குழி சாலை, பெரிய தெரு, கம்மாளர் வீதி, கவரை தெரு என கடந்து, பகல் 12:15 மணிக்கு நிலையை அடைந்தனர்.
பெரிய தெருவில் தேர்கள் கடந்தபோது, கன மழை பெய்ய துவங்கி, ஒரு மணி நேரம் நீடித்தது. பக்தர்கள், கொட்டும் மழையிலும், 'ஓம் நமசிவாய' முழக்கத்துடன் வடம் பிடித்தனர்.