சென்னை புறநகர் பகுதிகளான வண்டலுார், ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், காட்டாங்கொளத்துார், சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை படுஜோராக நடக்கின்றன.
இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்கும் வகையில், புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இருப்பினும், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில் உள்ள புறநகர் பகுதிகளான ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் ஆகிய பகுதிகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பெட்டி கடை, டீ கடை முதல் மளிகை கடை வரை, அமோகமாக விற்கப்படுகின்றன.
வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து புகையிலை பொருள்கள் கடத்தி வரப்பட்டு, அதிகாலை நேரங்களில், கடைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன.
தற்போது, பள்ளி, கல்லுாரி விடுமுறை துவங்கி விட்டதால், அதிக அளவில் பதின்ம வயது குழந்தைகள் இந்த போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
உள்ளூர் கடைகளில், தொடர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
புதிதாக கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. அதுவும் 5 மடங்கு வரை விலையை உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.
இதை கட்டுப்படுத்த வேண்டிய போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
குறிப்பாக, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலை நகர் காவல் துறையினர் சிலர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களிடம், மாதம் குறிப்பிட்ட தொகையை 'கட்டிங்' பெற்று செல்கின்றனர்.
உயர் அதிகாரிகளுக்கு கணக்கு காட்ட மட்டும், அவ்வப்போது குறிப்பிட்ட அளவு புகையிலை பொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. இதனால், புகையிலை பொருள்களை கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
எனவே, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, அரசும் போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் புகையிலை பொருட்களை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நமது நிருபர் -