புதுச்சேரி : பெண் இனத்திற்கு உதவி செய்யும் வகையில், குடும்பத்தோடு 2 மணி நேரம் இருப்பதற்கான விடுப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடந்த குஜராத் திவஸ், மகராஷ்டிரா திவஸ் நிகழ்வில் பங்கேற்ற, கவர்னர் தமிழிசை பேசியதாவது;
இன்று மாநில மொழி வாரியாகவும், எல்லை வாரியாகவும் மகராஷ்டிரா, குஜராத் பிறந்த தினமாகும்.
இந்த நாள் அனைத்து ராஜ்பவனில் கொண்டாடப்படுகிறது.
அனைத்து மாநிலங்களில் நாம் இணைந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறோம்.
400 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிரா மக்கள், மதுரை, தஞ்சாவூர், கும்பகோணத்துக்குவந்து தங்கள்வாழ்வியலை நடத்தியதோடு, நெசவு தொழிலிலும் தமிழர்களோடு இணைந்து பணிபுரிந்தனர்.
சகோதரத்துவத்தை உணர்த்தவே இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு பிறந்த தினமும் மற்ற மாநிலங்களில் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு தாண்டியா, நமக்கு அது கோலாட்டம். தி.மு.க., காங்., நல்லது செய்தால் பாராட்டுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை.
2 மணி நேரம் விடுப்பு அறிவிப்புக்கு பெண்கள் எல்லோரும் பாராட்டுகின்றனர்.
அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பெண்களுக்கு உதவி செய்யும் வகையில், பண ரீதியாக, உதவி ரீதியாக சில சலுகைகள் தந்துள்ளோம். மன ரீதியாக சலுகை கொடுப்பதற்காக, 2 மணி நேரம் குடும்பத்தோடு இருக்க அலுவலகத்தில் இருந்து விடுப்பு தந்துள்ளோம்.
ஏதாவது ஒன்று அவர்களுக்கு செய்ய வேண்டும் என நினைத்து, எனது ஆலோசனையை அரசு ஏற்று செயல்படுத்தியுள்ளது. தொல்லியல் துறையினர், கவர்னர் மாளிகையை பலப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கு நான், பழமை மாறாமல் சரிசெய் வேண்டும் என கூறியுள்ளேன். அது வரை கவர்னர் மாளிகை மாற்று இடம் எங்கு என்பது பற்றி ஆலோசனை செய்யப்படும் எனப் பேசினார்.