திருப்பூரில், சிறுவன் ஓட்டி சென்ற கார், ரோட்டை கடக்க முயன்ற சிறுமி மீது மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில் வழி, வாய்க்கால் மேட்டை சேர்ந்த ஆதிநாராயணன் மகள் தீபிகா, 12. அருகிலுள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை, முத்தணம்பாளையம் - தாராபுரம் ரோட்டில் கடைக்கு செல்ல சிறுமி நடந்து சென்றார்.
அப்போது சிறுமி ரோட்டை கடக்க முயன்றார். அதே வழியே வந்த காரின் டிரைவர், காரை நிறுத்த முயன்ற போது கவிழ்ந்து, சிறுமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. பலத்த காயமடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். கவிழ்ந்த காரில் இருந்தவரை அப்பகுதியினர் மீட்டனர்.
இது குறித்து நல்லுார் போலீசாரின் விசாரணையில், காரை ஓட்டியது, அப்பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுவன், என்பதும், தனியாக காரை ஓட்டி வந்ததும் தெரிந்தது.
லேசான காயத்துடன் சிறுவன் உயிர் தப்பினார். அவரை மீட்ட மக்கள், சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.