வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
ச.சுந்தரம், நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கல்லுாரி மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் தருகிறோம்; மொபைல் போன் வாங்கலாம்; யாரிடமாவது ரகசியமாக பேசலாம்; யாரையாவது கூப்பிட்டு சினிமாவுக்கும் போகலாம்' என்று, தி.மு.க., பொதுச்செயலரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் துடுக்குத்தனமாக பேசி, தமிழகத்தில் வாழும் பெண்கள் அனைவரையும் கொச்சைப்படுத்தி உள்ளார்.
இவர்களிடம், 'எங்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுங்கள்...' என்று அம்மாக்களோ, பொண்ணுங்களோ கேட்டனரா? இவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கோலோச்சுவதற்காக, சகட்டு மேனிக்கு வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கினர். தற்போது, தாங்கள் சொன்னதை, தாங்களே கேலியும், கிண்டலும், ஏளனமும் செய்வது எந்த வகையில் நியாயம்?
![]()
|
துரைமுருகன் மட்டுமல்ல... பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.,ராமச்சந்திரன் என பலரும், அதிகப் பிரசங்கித்தனமாக பேசி, மக்களின் வயிற்றெரிச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
அமைச்சர்களின் இந்த ஆணவம் மற்றும் அகம்பாவம் கலந்த பேச்சைக் கேட்டு வெகுண்டெழும் மக்களை சமாதானப்படுத்த, முதல்வர் தலையிட்டு, அமைச்சர்களை கண்டித்தால், நிலைமை சரியாகி விடும்; அவர்கள் திருந்தி விடுவர் என்று நம்பி, இப்பகுதிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். அவர்களை நினைத்தால், பரிதாபமாக இருக்கிறது.
தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவருமே, தங்களை, 'முதல்வர்' ஆகவே நினைக்கின்றனர். தாங்கள் அமைச்சர் தான், தங்களுக்கு மேலாக ஒரு முதல்வர் இருக்கிறார் என்று எண்ணிப் பார்ப்பதே இல்லை. அதனால் தான், அவர்கள் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒவ்வொன்றும், விஷம் தோய்ந்ததாக உள்ளன.
முதல்வர் மிகவும் பாவம்... தினமும் ஒரு முறை தான், 'தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது' என்று சொல்வதற்கும், அவரின் கையில் கொடுக்கும் துண்டுச் சீட்டை பார்த்து படிப்பதற்கும் மட்டுமே, அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, அத்துமீறும் அமைச்சர்களை கண்டிக்கும் அளவுக்கும், நாட்டை நிர்வகிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்படவில்லை.
அமைச்சர்களின் அடாவடி பேச்சுக்களை சகித்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள் மக்களே... அவர்களின் குதர்க்கமான பேச்சுக்கள் காதுகளில் விழும் போது, அதுவிழாத வகையில், காதுகளை இறுக்க மூடிக் கொள்ளுங்கள்; வேறு வழியே இல்லை.