கூடலுார்:பெரியாறு புலிகள் சரணாலயம் முல்லைக்கொடி வனப்பகுதியில் விடப்பட்ட அரிசி கொம்பன் எனும் ஆண் காட்டு யானை, மூன்று நாட்களில் தமிழக வனப்பகுதியான மேகமலை உச்சிக்காடு பகுதிக்கு வந்துள்ளது.
கண்ணகி கோவில் விழாவை சீர்குலைப்பதற்காகவே இப்பகுதியில் காட்டு யானை விடப்பட்டதாக தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரளா, இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சாந்தாம்பாறை, சின்னக்கானல் பகுதியில் அச்சுறுத்தி வந்த, 35 வயது அரிசி கொம்பன் காட்டு யானையை, கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து, ஏப்., 29 இரவில் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் உள்ள முல்லைக்கொடி வனப்பகுதியில் விட்டனர்.
மூணாறில் இந்த யானை ஐந்து ஆண்டுகளில் எட்டு பேரை கொன்றுள்ளது. வீடுகள், கடைகள் என, ஏராளமான கட்டங்களையும் சேதப்படுத்தியுள்ளது.
இதனால் இதன் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர்' பொருத்தப்பட்டு, பெரியாறு புலிகள் சரணாலயத்தில் இதன் நடமாட்டத்தை கேரள வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
தேக்கடி நீர்த்தேக்க பகுதியான முல்லைக் கொடியிலிருந்த யானை, மூன்று நாட்களில் பல கி.மீ., துாரம் கடந்து, தமிழக வனப்பகுதியான மேகமலை உச்சிக்காடு, மாவடி பகுதிக்கு வந்துள்ளது.
இதை ரேடியோ காலர் உதவியுடன் கேரள வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
தற்போது யானை முகாமிட்டுள்ள பகுதியில் இருந்து கண்ணகி கோவில் சில கி.மீ., துாரமே உள்ளது. மேலும், மூணாறில் அரிசியை ருசி பார்த்த இந்த யானை, கண்ணகி கோவில் அடிவாரப் பகுதியான சுருளியாறு, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி, பளியன்குடி, காஞ்சிபுரத்துறையில் உள்ள குடியிருப்புகளுக்கு வரும் அபாயம் உள்ளது.
இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
எஸ்.ராஜசேகர், தலைவர், ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம்: மே 5ல் தமிழக கேரள எல்லை கண்ணகி கோட்டத்தில் நடக்கவுள்ள விழாவில் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக அதை ஒட்டியுள்ள வனப்பகுதியில் அரிசி கொம்பன் யானையை விட்டுள்ளனர்.
யானையை பிடித்து முகாமிற்கு அனுப்பாமல் தமிழக எல்லைப் பகுதியில் விட்டுள்ளதை ஏற்க முடியாது. தேனி மாவட்ட நிர்வாகமும், வனத்துறை, காவல்துறை இணைந்து யானையின் நடமாட்டத்தை தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தப்படும்.
சதீஷ்பாபு, மாவட்டத் தலைவர், பாரதிய கிசான் சங்கம்: மூணாறில் மக்களை அச்சுறுத்தியதால்தான் யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப் பட்டது.
ஆனால் கேரள வனத்துறையினர் தமிழக கேரள எல்லையில் விட்டு மீண்டும் அதே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
கண்ணகி கோயிலை ஒட்டியுள்ள உச்சிக்காடு, மாவடி வரை வந்த இந்த யானையால் உயிரிழப்பு சம்பவங்கள் அரங்கேற உள்ளன.
இதனை முன்கூட்டியே தடுக்க வேண்டியது அவசியமாகும்.