கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பஜாரில், கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், நவீன புறக்காவல் நிலையம், 2016ல் திறக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியின் முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் நேரடி காட்சிகளை, அந்த புறக்காவல் நிலையத்தில் இருந்தபடி, எல்.இ.டி., திரையில் கண்காணித்து, அசம்பாவிதம் கண்டறியப்படும் இடத்தில், ஒலி பெருக்கி வாயிலாக எச்சரிக்கும் வசதியை, வியாபாரிகள் சங்கத்தினர் ஏற்படுத்தி தந்தனர்.
கும்மிடிப்பூண்டி போலீசார், அதை முறையாக பராமரிக்க தவறியதன் விளைவாக, சில ஆண்டுகளிலேயே பயனற்று போனது.
முறையான பராமரிப்பின்றி, கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பழுதாகி போயின. புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா சம்பந்தமான கருவிகள் மற்றும் 'எல்.ஈ.டி., டிவி' பழுதாகி இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் நடைபெறும் அசம்பாவிதங்களை தடுப்பதற்காக வியாபாரிகள் எடுத்த முயற்சி வீணானது என, பகுதிவாசிகள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் அந்த புறக்காவல் நிலையத்திற்கு புத்துயிர் அளித்து, அனைத்து வசதிகளையும் புதிதாக ஏற்படுத்தி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியை, போலீசார் முறையாக கண்காணிக்க வேண்டும் என, பொதுமக்களும், வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.