திருவாலங்காடு:சென்னை -- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில், திருவள்ளூர் அடுத்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இங்கு பாகசாலை, மருதவல்லிபுரம், குப்பம் கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், சென்னை, திருவள்ளூர், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மணவூர் ரயில் நிலைய பகுதி மற்றும் கடைகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகள், ரயில் நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தும் பகுதியில் கொட்டப்படுகிறது.
அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், ரயில் நிலையம் வரும் பயணியரும் முகம் சுளிக்கின்றனர்.
எனவே,தேங்கியுள்ள குப்பைக் கழிவுகளை அகற்றி, மீண்டும் அங்கு குப்பை கொட்டாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.