மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கடற்கரை பகுதி, 75 கி.மீ., நீளம் உள்ளது. சென்னை அடுத்த கானத்துார் ரெட்டிக்குப்பம் - இடைக்கழிநாடு ஆலம்பரைகுப்பம் இடையே, 44 மீனவ பகுதிகளில், 22 ஆயிரம் மீனவர்கள் வசிக்கின்றனர்.
ஒவ்வொரு பகுதியிலும், குறைந்தபட்சம் 15 முதல், அதிகபட்சம் நுாற்றுக்கும் மேற்பட்ட படகுகள் உள்ளன. மீனவ சேவைகள் நிர்வாகத்திற்காக, மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் இயங்குகிறது.
மானிய விலை மீன்பிடி படகுகள், வலைகள், டீசல் வாங்கவும், பிற சேவைகள் பெறவும், மீனவர்கள் இந்த அலுவலகத்தை அணுகுகின்றனர்.
இந்த அலுவலகம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தொடர்பற்ற, சென்னை நீலாங்கரை பகுதியில் இயங்குகிறது.
எனவே, சேவைகளை பெற நினைக்கும் மீனவர்கள், மீன்வள உதவி இயக்குனர் அலுவலகம் செல்ல, தினசரி நீண்ட துாரம் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது.
கடந்த 2019ல் காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்படுவதற்கு முன், கொட்டிவாக்கம் பகுதி வரை, காஞ்சிபுரம் மாவட்ட பகுதியாக இருந்தது. இதனால், மீன்வளத்துறை அலுவலகம் நீலாங்கரை பகுதியில் செயல்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் உருவான பிறகு, கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரை, சென்னை மாநகராட்சி பகுதியாக மாற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் கானத்துாரில் துவங்குவதால், மீன்வளத்துறை அலுவலகத்தை மாவட்ட பகுதிக்கு மாற்ற வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், தற்போதும் சென்னை பகுதியில் தான் இயங்குகிறது. இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தின் கடலோரப் பகுதி மீனவர்கள், மீன்வளத்துறை அலுவலகம் செல்ல, 10 கி.மீ., முதல் 90 கி.மீ., வரை பயணித்து அவதிப்படுகின்றனர்.
அது மட்டுமின்றி, மீன்பிடி படகிற்கு மானிய டீசல் வாங்கவும், நீண்ட தொலைவு பயணிக்க வேண்டியுள்ளது. மீன்வளத்துறையில் பதிவுபெற்ற படகுகளுக்கு, கடந்த 2005ம் ஆண்டு முதல், அரசு மானிய டீசல் வழங்குகிறது.
இதற்காக, உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கும் நீலாங்கரையிலும், செங்கல்பட்டு மாவட்ட தெற்கு எல்லையான கோட்டைக்காடு பகுதியிலும், மீன்வளத்துறையின் மானிய டீசல் 'பங்க்'குகள் செயல்படுகின்றன.
துவக்கத்தில், நீலாங்கரை பகுதியில் உள்ள 'பங்க்' மட்டுமே இயங்கியது. அதன் பின், கூடுதல் 'பங்க்' அமைக்க வேண்டும் என, மீனவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று, 10 ஆண்டுகளுக்கு முன், விழுப்புரம் மாவட்ட கடலோர பகுதிக்கான 'பங்க்' கோட்டைக்காடு பகுதியில் அமைக்கப்பட்டது.
மாமல்லபுரம், புதுப்பட்டினம் சுற்றுப்புற பகுதியினர், மானிய டீசல் வாங்க 40 கி.மீ., - 60 கி.மீ., செல்ல வேண்டும். இதே போன்று, கோட்டைக்காடு பங்கிற்கு, இடைக்கழிநாடு மீனவர்கள் செல்வது எளிது. ஆனால், மாவட்டத்தின் பிற பகுதியினர், 15 - 30 கி.மீ., வரை பயணிக்க வேண்டும்.
இது குறித்து, சில ஆண்டுகளுக்கு முன், நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
மீன்வளத் துறை பரிசீலித்து, மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி கடலோர சாலை பகுதியில், 'பங்க்' அமைக்க முடிவெடுத்தது. அதற்காக, வருவாய்த் துறையிடம் 50 சென்ட் நிலம் கோரப்பட்டது.
வருவாய்த் துறை இடம் வழங்காத நிலையில், இத்திட்டம் துவக்க நிலையிலேயே முடங்கியது. அடுத்து, கல்பாக்கம் அடுத்த வாயலுார் பாலாற்றுப் பாலம் அருகில் இடம் அளிக்க கோரப்பட்டது. அதிலும், தற்போது சிக்கல் நீடிக்கிறது.
இச்சூழலில், மீனவர்கள் எளிதாக அணுக, உதவி இயக்குனர் அலுவலகத்தை, மாமல்லபுரம் அல்லது புதுப்பட்டினம் பகுதிக்கு மாற்றவும், புதுப்பட்டினம் பகுதியில் கூடுதல் 'பங்க்' அமைக்கவும், மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.
கூடுதலாக டீசல் 'பங்க்' அமைக்க, பல இடங்களை பரிசீலித்து வருகிறோம். இடம் முடிவாகி வருவாய்த் துறையினர் ஒப்படைத்ததும், அங்கு மானிய விலை டீசல் 'பங்க்' அமைக்கப்படும். மீன்வளத் துறை அலுவலக இடமாற்றம் குறித்து, அரசு தான் முடிவெடுக்க வேண்டும்.
- மீன்வளத் துறை அலுவலர்.